மார்க்கம் (Markham) பகுதியில் இடம்பெற்ற சம்பவமொன்றைத் தொடர்ந்து, ரொறன்ரோ பகுதியைச் சேர்ந்த இரண்டு சிறுவர்கள் உட்பட மூவர் மீது யோர்க் பிராந்திய காவல்துறை குற்றம் சுமத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வரும் மிரட்டிப் பணம் பறிக்கும் (Extortion) திட்டம் மற்றும் கடத்தல் சதித் திட்டத்துடன் தொடர்புடையது எனப் புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஜூன் 13 அன்று, பிரின்ஸ் வில்லியம் டிரைவ் (Prince William Drive) மற்றும் ஸ்வான்சீ சாலைக்கு (Swansea Road) அருகிலுள்ள வீடொன்றின் வெளியே முகமூடி அணிந்த மூன்று ஆண்கள் நின்று கொண்டு, அங்கு வசிப்பவர் ஒருவருடன் பேச வேண்டும் என வற்புறுத்துவதாக வீட்டு உரிமையாளர் அளித்த தகவலின் பேரில் காவல்துறை அங்கு அழைக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், சந்தேகநபர்கள் மூவரையும் அங்கேயே கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் போலி துப்பாக்கி (Replica firearm) ஒன்றை வைத்திருந்ததாகப் புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், இந்தச் சம்பவம் தற்போது தீவிரமாக விசாரிக்கப்பட்டு வரும் ஒரு மிரட்டிப் பணம் பறித்தல் வழக்குடன் தொடர்புடையது என்பதும், நபர் ஒருவர் கடத்தப்படுவதற்கான இலக்காக வைக்கப்பட்டிருந்ததும் கண்டறியப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக ரொறன்ரோவைச் சேர்ந்த 19 வயதான ஜெரிமியா பிரவுன்-வாட்சன் (Jerimyah Brown-Watson) என்பவர் மீது பின்வரும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன:
-
குற்றவியல் செயலொன்றைப் புரிவதற்கு சதி செய்தல்
-
குற்றநோக்கத்துடன் முகத்தை மறைத்திருத்தல் (முகமூடி அணிந்திருந்தமை)
-
ஆபத்தான நோக்கத்திற்காக ஆயுதம் வைத்திருந்தமை
இவர்களுடன் ரொறன்ரோவைச் சேர்ந்த 17 மற்றும் 16 வயதுடைய இரு சிறுவர்கள் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இளம்பருவ குற்றவியல் நீதிச் சட்டத்தின் (Youth Criminal Justice Act) கீழ் இவர்களது அடையாளங்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன.
இப்போதைக்கு மேலதிக சந்தேகநபர்கள் எவரையும் தேடவில்லை என்று தெரிவித்துள்ள காவல்துறை, எனினும், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு பிற சம்பவங்களுடன் தொடர்பு உள்ளதா என்பதைக் கண்டறியும் நோக்கில் இந்த மிரட்டிப் பணம் பறித்தல் தொடர்பான விரிவான விசாரணை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.