சென்னை:
தவெக எம்.எல்.ஏ.க்களுடன் முதலமைச்சர் விஜய் இன்று மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் மிக முக்கியமான ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். சுமார் இரண்டரை மணி நேரம் நடைபெற்ற இக்கூட்டத்தில், எம்.எல்.ஏ.க்களுக்கு அவர் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
ட்ராப்பில் சிக்காதீர்கள்:
இக்கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான என்.ஆனந்த் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் பேசியதாகக் கூறப்படுவதாவது: “நமக்கு எதிர்க்கட்சிகள் அதிகமாக உள்ளன. எனவே, அவர்களின் எந்த ட்ராப்பிலும் சிக்காமல் மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்துவதில் நீங்கள் முழு கவனம் செலுத்த வேண்டும். நமது ஆட்சிக்கு எதிராகப் பல்வேறு தவறான, அவதூறு செய்திகளைத் திட்டமிட்டுப் பரப்பி, அரசு நிர்வாகத்தை முடக்கப் பலர் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனர். அத்தகைய செயல்களுக்கு நமது சட்டப்பேரவை உறுப்பினர்கள் எந்த விதத்திலும் இடம் தந்துவிடக் கூடாது”
காவல்துறைக்கு முழு சுதந்திரம்:
தொடர்ந்து அவர், “சட்டம் ஒழுங்கு பிரச்சனையில் காவல் துறைக்கு எவ்வித அரசியல் தலையீடுமின்றி முழு சுதந்திரம் வழங்கி உள்ளேன். உங்கள் தொகுதியில் நீங்கள் செய்யக்கூடிய பணிதான் அடுத்த தேர்தலில் உங்களை மீண்டும் வேட்பாளராக ஆக்கும். உங்கள் தொகுதி தொடர்பாகவோ அல்லது கட்சி ரீதியாகவோ ஏதாவது பிரச்சனை இருந்தால் உடனடியாக என்னை நேரில் வந்து சந்திக்கலாம். என்னை நேரில் சந்திப்பதை யாராவது தடுத்தாலும் அது குறித்தும் என்னிடம் நேரடியாகச் சொல்லுங்கள்,” என்று உறுதியளித்தார். மேலும், கூட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் தீபாவளிப் பரிசாகப் பட்டு வேட்டி மற்றும் பட்டுப் புடவைகளை முதலமைச்சர் விஜய் வழங்கி சிறப்பித்தார்.
சர்ச்சை எம்.எல்.ஏ.க்கள்:
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாகப் பிரதான எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வரும் நிலையில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து முதலமைச்சர் விஜய் நேற்று உயரதிகாரிகளுடன் தலைமைச் செயலகத்தில் தீவிர ஆலோசனை நடத்தினார். இது ஒருபுறம் இருக்க, ஆளுங்கட்சியினரின் செயல்பாடுகளும் பொதுவெளியில் பெரும் சர்ச்சைக்குள்ளாகி வருகின்றன. குறிப்பாகச் சட்டப்பேரவைத் துணைத் தலைவர் ரவிசங்கர் மற்றும் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீதான குற்றச்சாட்டுகள் அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.
நடவடிக்கை பாயுமா?:
துறையூரில் குடிநீர் விநியோகம் தொடர்பாக முறையிட்ட நபரைக் கடுமையாகத் தாக்கி விரட்டியதாகத் துணை சபாநாயகர் ரவிசங்கர் மீதும், பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீதும் எதிர்க்கட்சிகள் சரமாரியாகக் குற்றம் சாட்டியுள்ளன. இந்த இரண்டு விவகாரங்களும் அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ள நிலையில், இன்று நடந்த எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் அவர்கள் இருவரும் நேரில் பங்கேற்றனர். சர்ச்சையில் சிக்கியவர்கள் மீது கட்சி ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுமா என்பது குறித்த எந்தத் தகவலும் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. முதலமைச்சரின் இந்தக் கூட்டம் எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.