சென்னை
காட்டுமன்னார்கோயில் தொகுதி விசிக எம்.எல்.ஏ ஜோதிமணி, மக்கள் பணி செய்யச் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அரசு கார் வழங்க வேண்டும் எனச் சட்டப்பேரவையில் கோரிக்கை விடுத்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
சொந்த வாகனம் இல்லை!:
சட்டசபைக் கூட்டத்தொடரில் பேசிய விசிக எம்.எல்.ஏ ஜோதிமணி, “நான் தலைமைச் செயலகத்திற்கு 280 கிலோமீட்டர் தொலைவிலிருந்து பயணம் செய்து வருகிறேன். பேருந்திலோ, ரயிலிலோ பயணம் செய்து பேரவைக்கு வருவதற்குப் போக்குவரத்துப் படிகள் வழங்கப்படுகின்றன. ஆனாலும், எனக்குச் சொந்தமாக வாகனம் எதுவும் கிடையாது; வாடகை வாகனத்தில்தான் வருகிறேன்,” என்று கூறினார்.
ஊழலற்ற அரசு அமையக் கோரிக்கை:
மேலும் பேசிய அவர், “எனது காட்டுமன்னார்கோவில் சட்டமன்றத் தொகுதியின் சுற்றளவு 40 கிலோமீட்டர். தொகுதியில் மக்களைச் சந்தித்துப் பணி செய்வதற்கான வாகன வசதி என்னிடம் இல்லை. லஞ்சம், லாவண்யம் இல்லாத ஊழலற்ற அரசு அமைய வேண்டும் என்றால், உறுப்பினர்களை நலமுடன் வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். எனவே, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு உதவி செய்யும் வகையில் அரசு வாகன வசதி (கார்) செய்து தர வேண்டும்,” எனப் பேரவையில் கோரிக்கை வைத்தார்.
சபாநாயகர் அளித்த உறுதி:
எம்.எல்.ஏ ஜோதிமணியின் இந்தக் கோரிக்கையைக் கேட்ட சபாநாயகர், “முதலமைச்சருக்குக் கிள்ளிக் கொடுக்கும் கரங்கள் அல்ல; அள்ளிக் கொடுக்கும் கரங்கள்தான். அந்த வகையில் அவையில் உள்ள அனைத்துச் சட்டமன்ற உறுப்பினர்களுக்காகவும் இது குறித்து முதல்வரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்படும்,” என்று உறுதியளித்தார்.
#VCK #MLAJothimani #Kattumannarkoil #TNAssembly #TamilNaduNews #Chennai #TNPolitics #ViralNewsTN #TrendingTN #LatestNewsTN #TNNewsUpdates