உயிர்த்த ஞாயிறு நீண்ட வார இறுதி நெருங்கி வரும் வேளையில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களைக் காணச் சாலைப் பயணங்களை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ள கனடியர்கள் எரிபொருள் நிலையங்களில் மீண்டும் அதிக விலையைச் செலுத்த வேண்டியிருக்கும்.
ஈரான் போர் தொடங்கியதில் இருந்து எரிபொருள் விலைகள் வேகமாக உயர்ந்துள்ள நிலையில் ” GasBuddy” நிறுவனத்தின் பெட்ரோலிய ஆய்வாளர் பேட்ரிக் டி ஹான் எதிர்காலத்தில் இந்த விலையில் பெரிய மாற்றம் அல்லது குறைவு ஏற்படும் என்பதற்கான அறிகுறிகள் தென்படவில்லை என்று எச்சரிக்கிறார்.
“எண்ணெய் விலை இன்று சுமார் 10 சதவீதம் வரை பாரிய அளவில் உயர்ந்துள்ளது. இது வார இறுதி முழுவதும் எரிபொருள் விலைகள் தொடர்ந்து உயர்வதற்குக் காரணமாக அமையும்” என்று அவர் கூறினார்.
தேசிய சராசரி: கனடாவின் தற்போதைய தேசிய சராசரி பெட்ரோல் விலை ஒரு லீட்டருக்கு 180.8 (1.80 டொலர்) ஆக உள்ளது. இது கடந்த வாரத்தை விட கிட்டத்தட்ட ஒன்பது சென்ட் அதிகமாகும்.
டீசல் விலை: அடுத்த 48 மணிநேரத்திற்குள் டீசல் விலை 2.25 டொலரை தாண்டி புதிய சாதனையை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விமானக் கட்டணம்: “விமான எரிபொருளின்விலை கிட்டத்தட்ட இருமடங்காக உயர்ந்துள்ளதால் மக்கள் விமானப் பயணங்களுக்கும் அதிக பணம் செலவழிக்க வேண்டியிருக்கும்” என்று டி ஹான் குறிப்பிட்டார்.
டி ஹான் கருத்துப்படி மாரடைம்ஸ் பிரிட்டிஷ் கொலம்பியா கியூபெக் மற்றும் நோவா ஸ்கோடியா போன்ற கடலோரப் பகுதிகளில் விலையேற்றம் மிகவும் கடுமையாக உள்ளது.
“எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட தயாரிப்புகளை (பெட்ரோல் டீசல்) எளிதாக வெளிநாடுகளுக்கு அனுப்பக்கூடிய சந்தைகளில் போட்டி அதிகமாக உள்ளது. கனடாவின் கடலோரப் பகுதிகள் இப்போது உலகளாவிய சந்தையுடன் போட்டியிட வேண்டிய கட்டாயத்தில் உள்ளன” என்று அவர் விளக்கினார். இதற்கு நேர்மாறாக அல்பேர்ட்டா போன்ற உள்நாட்டுப் பகுதிகளில் வரிகள் குறைவாக இருப்பதாலும் அங்கிருந்து பொருட்களை ஏற்றுமதி செய்வது கடினம் என்பதாலும் விலை உயர்வு ஓரளவுக்குக் குறைவாகவே உள்ளது.
டொனால்ட் ட்ரம்ப் போர் தொடங்கிய பிறகு ஆற்றிய தனது முதல் உரையில் ஹார்முஸ் நீரிணையைத் திறக்க ஈரானுக்கு விதித்த காலக்கெடு குறித்து எதுவும் குறிப்பிடவில்லை. விநியோகத் தடைகளை நீக்கி எரிசக்தி விலைகளைக் குறைப்பதற்கான எந்தத் தீர்வையும் அவர் முன்வைக்கவில்லை.
ட்ரம்ப் ஹார்முஸ் நீரிணை முடக்கத்திற்குத் தெளிவான திட்டம் எதனையும் முன்வைக்காததே வியாழக்கிழமை எண்ணெய் விலை உயரக் காரணமாக அமைந்தது” என்று டி ஹான் கூறினார்.
“கனடா இந்தப் போரில் நேரடியாகத் தலையிட விரும்பவில்லை என்றாலும் ஹார்முஸ் நீரிணை வழியாகக் கப்பல்கள் பாதுகாப்பாகப் பயணிக்கத் தொடங்கும் வரை உலகப் பொருளாதாரம் டீசல் மற்றும் எரிபொருள் விலையேற்றத்தால் தொடர்ந்து பாதிக்கப்படும். இது நாளுக்கு நாள் ஒரு பெரிய சிக்கலாக உருவெடுக்கும்” என ஆய்வாளர் எச்சரித்துள்ளார்.