கண்டி, நத்தரன்பொத்த பகுதியில் உள்ள உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் வாடகை வீட்டில் இருந்து மூன்று கைக்குண்டுகள் மற்றும் வாள்கள் உட்பட பல்வேறு ஆயுதங்கள் குவியலாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கண்டி பொலிஸ் பிரிவைச் சேர்ந்த பொலிஸ் குழுவினர், குறித்த உதவிப் பொலிஸ் அத்தியட்சகரின் மனைவியால் கண்டியின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு வழங்கப்பட்ட தகவலின் பேரில், குறித்த வீட்டில் சோதனை நடத்தி இந்த ஆயுதங்களை கைப்பற்றியுள்ளனர்.
வட மாகாண பொலிஸ் பிரிவு ஒன்றில் கடமையாற்றும் இந்த உதவிப் பொலிஸ் அத்தியட்சகர், தனது மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளுடன் இந்த வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளதோடு கணவன் – மனைவிக்கு இடையே நீண்ட நாட்களாக குடும்பத் தகராறு நிலவி வந்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து பல்லேகலை பொலிஸாரும், கண்டியின் விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.