இலங்கையில் திட்டமிடப்படாத அல்லது அறிவிக்கப்படாத மின்வெட்டுகள் நடைமுறைப்படுத்தப்படுவதாக எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி இன்று நாடாளுமன்றத்தில் முற்றாக நிராகரித்தார்.
ஒருவேளை திட்டமிட்ட மின்வெட்டுகளை அமல்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டால், அது குறித்து முன்கூட்டியே பொதுமக்களுக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என அமைச்சர் உறுதியளித்தார்.
தொழில்நுட்பக் கோளாறுகள்: சில பகுதிகளில் ஏற்படும் மின்சாரத் தடைகள் மின்வெட்டு அல்ல, அவை திடீர் தொழில்நுட்பக் கோளாறுகள் (Breakdowns) மட்டுமே. இவ்வாறான கோளாறுகள் கண்டறியப்பட்டவுடன் மின்சாரத்தை விரைவாக மீட்டெடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
முன்னதாக சபையில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமான், நாடு முழுவதும் அறிவிக்கப்படாத மின்வெட்டு நிலவுவதாகக் குற்றம் சாட்டினார்.
“எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் அமைந்துள்ள பகுதி உட்பட நாட்டின் பல இடங்களில் நேற்று சுமார் இரண்டு மணிநேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அரசாங்கம் மக்களுக்குத் தெரியப்படுத்தாமலேயே மின்வெட்டை அமல்படுத்துகிறது,” என அவர் கடுமையாகச் சாடினார்.