இலங்கைக்கான அரபு நாடுகளின் தூதுவர் பேரவையின் (Council of Arab Ambassadors) பிரதிநிதிகளை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இன்று (08) ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தார். இதன்போது, மத்திய கிழக்கில் விரைவில் அமைதி நிலவ வேண்டுமென்ற இலங்கையின் எதிர்பார்ப்பை அவர் வெளிப்படுத்தினார்.
பிராந்தியத்தில் நிலவும் மோதல் சூழலால் மத்திய கிழக்கு நாடுகள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அமைதி, பாதுகாப்பு, ஸ்திரத்தன்மைக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் குறித்து தூதுவர்கள் ஜனாதிபதிக்கு விளக்கமளித்தனர்.
தாக்குதல்களுக்குக் கண்டனம்: மோதலில் நேரடியாக ஈடுபடாத நாடுகள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்துத் தனது கவலையை வெளியிட்ட ஜனாதிபதி, அத்தகைய தாக்குதல்களை எந்தச் சூழ்நிலையிலும் அங்கீகரிக்க முடியாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
மத்திய கிழக்கு நாடுகளின் உதவிக்கு பாராட்டு: இலங்கையின் எரிசக்தித் தேவைகளைப் பூர்த்தி செய்தல், வெளிநாட்டு வேலைவாய்ப்பு வழங்கல் மற்றும் சுற்றுலாத்துறை மேம்பாடு ஆகியவற்றில் மத்திய கிழக்கு நாடுகள் வழங்கி வரும் ஒத்துழைப்புக்கு ஜனாதிபதி நன்றிகளைத் தெரிவித்தார்.
இலங்கைத் தொழிலாளர்களின் பாதுகாப்பு: மத்திய கிழக்கு நாடுகளில் பணியாற்றும் ஏராளமான இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அந்த நாடுகள் எடுத்து வரும் முயற்சிகளுக்கும் அவர் தனது நன்றியைத் தெரிவித்தார்.
மத்திய கிழக்கில் அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்காக, சர்வதேச சட்டக் கட்டமைப்பிற்குள் நின்று கொண்டு, தனிப்பட்ட ரீதியிலும் ஏனைய நாடுகளுடன் இணைந்தும் இலங்கை தனது முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என்று ஜனாதிபதி இதன்போது உறுதி அளித்தார்.