அரசாங்கம் பௌத்தத்துக்கு எதிராக செயற்படுகிறது என்று எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டுகிறார்கள்.ஆனால் அது எவ்வாறான செயற்பாடு என்று குறிப்பிடுவதில்லை.பௌத்த மதம் பாதுகாக்கப்பட வேண்டும் என்று அரசியலமைப்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் ஆட்சியில் உள்ள எந்த அரசாங்கமும் பௌத்தத்துக்கு எதிராக செயற்படாது என ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் குமாரபெரும தெரிவித்தார்.
கொழும்பில் புதன்கிழமை இடம்பெற்ற தேசிய புத்திஜீவிகள் அமைப்பின் ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
அரசாங்கம் பௌத்த மதத்துக்கு எதிராக செயற்படுவதாக எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டுகிறார்கள். ஆனால் அது எவ்வகையிலான குற்றச்சாட்டுக்கள் என்று எவரும் எவ்விடத்திலும் குறிப்பிடுவதில்லை. பௌத்த தேரர்கள் சட்டத்துக்கு விரோதமாக செயற்படும் போது அதற்கு சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கும் போது அதனை பௌத்தத்துக்கு எதிரான செயற்பாடு என்று எவ்வாறு குறிப்பிடுவது.
அரசாங்கம் பௌத்தத்துக்கு எதிராக செயற்படுவதாக குறிப்பிடுவது கேலிக்கூத்தானது. ஏனெனில் அரசியலமைப்பின் 9 ஆவது பிரிவின் பௌத்த மதம் பாதூக்கப்பட வேண்டும், போசிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.ஆகவே ஆட்சிக்கு வரும் எந்த அரசாங்கமும் பௌத்தத்துக்கு எதிராக ஒருபோதும் செயற்படாது.
பௌத்தத்துக்கு அச்சுறுத்தல் என்று குறிப்பிட்டுக் கொண்டு ஒருசில பௌத்த பிக்குகள் அண்மையில் கண்டியில் இருந்து கொழும்புவரை பேரணியாக வந்தார்கள். ஜனாதிபதி செயலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அதன் பின்னர் விகாரமாதேசி பூங்கா பக்கம் சென்றார்கள். இந்த நாட்டில் 72 சதவீதமளவில் பௌத்தர்கள் உள்ளார்கள். இதில் எத்தனை பேர் இந்த போராட்டத்தில் கலந்துக் கொண்டார்கள்.
அரசாங்கம் பௌத்தத்துக்கு எதிராக செயற்படுவதாக இருந்தால் ஒட்டுமொத்த மக்களும் ஒருசில தேரர்களின் போராட்டத்தில் கலந்துக் கொள்ள வேண்டும். ஆகவே அரசாங்கம் பௌத்தத்துக்கு எதிராக செயற்படுகிறது என்று குறிப்பிடுவது முற்றிலும் தவறானது என்றார்.