அமெரிக்காவின் குடியேற்ற அமலாக்கத் துறை (ICE) நடத்தி வரும் மனித உரிமை மீறல்களைக் கண்டித்தும், அதற்கு மறைமுகமாக உதவும் கனேடிய நிறுவனங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், மொன்ட்ரியல் நகரில் போராட்டம் நடைபெற்றது.
அமெரிக்காவின் மினியாபோலிஸ் (Minneapolis) நகரில் அண்மையில் பெடரல் ஏஜென்ட்களால் சுட்டுக் கொல்லப்பட்ட இரண்டு அமெரிக்கக் குடிமக்களின் மரணம் சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு நீதி கோரியும், டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அரசின் குடியேற்றக் கொள்கைகளை எதிர்த்தும் மொன்ட்ரியலில் உள்ள அமெரிக்கத் தூதரகம் முன்பாக மக்கள் திரண்டனர்.
இந்த வன்முறைகளில் கனடா “கூட்டுக்குற்றவாளியாக” இருப்பதாகப் போராட்டக்காரர்கள் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினர்.
ஒன்டாரியோவைச் சேர்ந்த ‘ரோஷெல்’ (Roshel) நிறுவனம் தயாரிக்கும் கவச வாகனங்கள் அமெரிக்காவில் போராட்டக்காரர்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படுவதாகச் சுட்டிக்காட்டப்பட்டது.
மொன்ட்ரியலின் ‘கார்டாவேர்ல்ட்’ (GardaWorld) மற்றும் வான்கூவரின் ‘ஹூட்ஸூட்’ (Hootsuite) போன்ற நிறுவனங்கள், அமெரிக்கக் குடியேற்றத் துறையுடன் வைத்துள்ள வர்த்தக ஒப்பந்தங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என முழக்கங்கள் எழுப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கது.