சென்னை
தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்து, பின்னர் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியால் மன்னிக்கப்பட்ட 21 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மீதான தகுதிநீக்க நடவடிக்கையைக் கைவிட்டதில் என்ன தவறு உள்ளது எனச் சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாகக் கேள்வி எழுப்பியுள்ளது.
21 எம்.எல்.ஏ.க்கள் மீதான தகுதிநீக்க நடவடிக்கை ரத்து:
கடந்த மே 13-ஆம் தேதி சட்டப்பேரவையில் நடைபெற்ற தவெக அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில், கொறடா உத்தரவை மீறி அரசுக்கு ஆதரவாக 25 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்தனர். இவர்களைத் தகுதிநீக்கம் செய்யக் கோரி எடப்பாடி பழனிசாமி சபாநாயகரிடம் மனு அளித்திருந்தார். இவர்களில் 4 பேர் ராஜினாமா செய்த நிலையில், மீதமுள்ள 21 எம்.எல்.ஏ.க்கள் மன்னிப்புக் கடிதம் அளித்தனர். இதனை ஏற்று எடப்பாடி பழனிசாமி தனது மனுவைத் திரும்பப் பெற்றதால், அவர்கள் மீதான தகுதிநீக்க நடவடிக்கையைச் சபாநாயகர் அதிரடியாகக் கைவிட்டார்.
நீதிமன்றத்தில் அனல் பறந்த வாதம்:
சபாநாயகரின் இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி வழக்கறிஞர் செல்வகுமார் தொடர்ந்த பொதுநல வழக்கு, தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், “கட்சி மாறி வாக்களித்தவர்களை மன்னிக்க அரசியல் கட்சிகளுக்கு அதிகாரமில்லை” என வாதிடப்பட்டது. அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், “இது கட்சிக்கும் உறுப்பினர்களுக்கும் இடையிலான உட்கட்சிப் பிரச்சனை; இதில் மூன்றாம் நபர் பொதுநல வழக்குத் தொடர முடியாது” எனத் திட்டவட்டமாக வாதிட்டார்.
“இதில் என்ன தவறு?” – நீதிபதிகள் அதிரடி கேள்வி:
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் குறுக்கிட்டு, “கொறடா உத்தரவை மீறி வாக்களித்தவர்களைக் கட்சியின் தலைவர் சட்டப்படி 15 நாட்களுக்குள் மன்னித்துவிட்டார்; அவர்கள் ராஜினாமா செய்யாமல் தொடர்ந்து கட்சி உறுப்பினர்களாகவே நீடிக்கின்றனர். இதைச் சபாநாயகரும் ஏற்றுக்கொண்டுள்ளார். இதில் என்ன தவறு உள்ளது?” எனக் கேள்வி எழுப்பினர். மேலும், தற்போதைய நிலையில் எந்தக் கட்சித்தாவல் நடவடிக்கையும் இல்லை எனத் தெரிவித்த நீதிபதிகள், இந்த வழக்கின் தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.
#AIADMK #MadrasHighCourt #TNAssembly #TVKGovernment #EdappadiPalaniswami #EPS #TNPolitics #TamilNaduMLAs #ChennaiNews #TamilNaduNews #ViralNewsTN #TrendingTN #LatestNewsTN #TNNewsUpdates