ஓய்வூதிய விதிகளில் மாற்றம்? கனடாவில் 71 வயதை எட்டியதும் ஓய்வூதியச் சேமிப்புக் கணக்கை மாற்ற வேண்டிய கட்டாயம் இல்லாமல் போகுமா? இதற்கான புதிய திட்டத்தை கனடா மத்திய அரசு தனது 2026 வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழிந்துள்ளது. ‘RRSP for Life’ என அழைக்கப்படும் இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்தால், ஓய்வூதியச் சேமிப்பை நிர்வகிக்கும் முறையில் முக்கியமான மாற்றம் ஏற்படலாம். தற்போதைய விதிகளின்படி, கனடாவில் ஒருவர் 71 வயதை அடையும் ஆண்டின் இறுதிக்குள் தனது RRSP சேமிப்புக் கணக்கை RRIF எனப்படும் ஓய்வூதிய வருமானக் கணக்காக மாற்ற வேண்டும். இல்லையெனில் பணத்தைப் பெற்றுக்கொண்டு அதற்குரிய வரிகளைச் செலுத்த வேண்டிய நிலை ஏற்படலாம். புதிய முன்மொழிவு இந்தக் கட்டாயக் கணக்கு மாற்றத்தை நீக்க முயற்சிக்கிறது. அதாவது, 71 வயதைக் கடந்த பின்னரும் ஒருவர் தனது RRSP கணக்கைத் தொடர்ந்து வைத்திருக்க முடியும். கணக்கின் உரிமையாளர் உயிரிழந்தால், அவருடைய கணவன், மனைவி அல்லது சட்டப்படி அங்கீகரிக்கப்பட்ட துணைவர் அந்தக் கணக்கின் அடுத்தடுத்த உரிமையாளராகத் தொடரும் வசதியையும் அரசு பரிசீலித்து வருகிறது. இதன் மூலம் ஓய்வூதியச் சேமிப்பை குடும்ப உறுப்பினர்களுக்கு மாற்றும் நடைமுறை எளிதாகலாம். * 71 வயதுக்குப் பிறகும் குறைந்தபட்ச வருடாந்தப் பணம் பெறும் கட்டாயம் தொடரும். * 71 வயதுக்குப் பிறகு புதிய RRSP பங்களிப்புகளைச் செய்ய முடியாது. * இந்த மாற்றங்கள் இன்னும் சட்டமாகவில்லை. இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்தால் நிர்வாகச் சிக்கல்கள் குறையும் என நிதித்துறை நிபுணர்கள் கருதுகின்றனர். கனடாவில் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பால் சிரமப்படும் முதியோருக்கு இந்த மாற்றம் மட்டும் போதுமானதாக இருக்காது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்த முன்மொழிவு தொடர்பாக பொதுமக்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்க 2027 ஜனவரி 8ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.