ஐபிஎல் 2026 தொடரில் விளையாடி வரும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணிக்கு ஒரு உற்சாகமான செய்தி கிடைத்துள்ளது. காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பத்திரண, இலங்கை கிரிக்கெட்கட்டுப்பாட்டுச்சபை (SLC) கட்டாய உடற்தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். இதனைத் தொடர்ந்து, அவர் இந்தியாவில் உள்ள கேகேஆர் அணியுடன் இணைவதற்கு தடையின்மை சான்றிதழ் (NOC) வழங்கப்பட்டுள்ளது.
பத்திரண ஏப்ரல் 17ஆம் திகதி இந்தியாவிற்குப் பயணம் மேற்கொள்வார். அன்று குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கேகேஆர் விளையாடுகிறது.
விளையாடும் வாய்ப்பு: ஏப்ரல் 17 போட்டியில் அவர் விளையாடமாட்டார். ஏப்ரல் 19ஆம் திகதி கொல்கத்தாவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக நடைபெறும் போட்டியில் இருந்து அவர் தெரிவுக்குக் கிடைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
டி20 உலகக் கிண்ணத் தொடரின் போது ஏற்பட்ட தசைப்பிடிப்பு (Calf strain) காரணமாக அவர் ஆரம்பப் போட்டிகளில் விளையாடவில்லை. முன்னதாக கேகேஆர் அணி அவரை 18 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
விளையாடிய 4 போட்டிகளில் 3 தோல்விகள் மற்றும் ஒரு போட்டி மழையினால் கைவிடப்பட்ட நிலையில், கேகேஆர் அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
ஹர்சித் ராணா மற்றும் ஆகாஷ் தீப் ஆகியோரின் காயங்கள், முஸ்தபிசுர் ரஹ்மான் விடுவிக்கப்பட்டமை மற்றும் வருண் சக்ரவர்த்தியின் ஃபார்ம் அவுட் ஆகியவற்றால் கேகேஆர் அணியின் பந்துவீச்சு பலவீனமடைந்துள்ளது.