பல ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று, தியாகிகளுக்கு கண்ணீரும் மலர்களும் தூவி அஞ்சலி!
தமிழ் மக்களின் விடுதலைக்காகத் தமது இன்னுயிரை ஈகம் செய்த மாவீரர்களை நினைவுகூரும் மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வு, இன்று வெள்ளிக்கிழமை (27) மாலை மன்னார் ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் ஆழ்ந்த உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிக்கப்பட்டது.
பல ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றுகூடிய இந்நிகழ்வில், தமது உறவுகளை இழந்த பெற்றோர்கள், குடும்பத்தினர், உறவினர்கள் எனப் பலரும் கண்ணீருடன் கலந்துகொண்டு, மண்ணுக்காக உயிர்நீத்த மாவீரர்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
மாலை 6.05 மணியளவில் இரண்டு மாவீரர்களின் தந்தையினால் பொதுச்சுடர் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து, மாவீரர்களின் பெற்றோர்கள், உறவினர்கள், முன்னாள் போராளிகள் மற்றும் மதத் தலைவர்கள் உள்ளிட்டோர் ஈகைச்சுடர் ஏற்றி, மலர் தூவி தமது அஞ்சலியைச் செலுத்தினர்.
கடந்த 2009ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தத்தின் நிறைவையடுத்து, இராணுவத்தினரால் ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லம் கைப்பற்றப்பட்டு, அங்கிருந்த கல்லறைகள் உடைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டிருந்தன.
ஒருகாலத்தில் மாவீரர்கள் விதைக்கப்பட்டிருந்த அந்தத் துயிலும் இல்லம் சிதைக்கப்பட்டு, கல்லறைகளின் கற்கள் ஆங்காங்கே சிதறிக் கிடந்த நிலையில், அவற்றை ஓரிடத்தில் ஒன்றுதிரட்டி, மாவீரர்களின் பெற்றோர்கள் தமது உறவுகளுக்கான நினைவேந்தலைத் தொடர்ந்து முன்னெடுத்து வந்தனர்.
இவ்வாறான வலிகளையும் இழப்புகளையும் கடந்து, இம்முறை குறித்த மாவீரர் துயிலும் இல்லம் புனரமைக்கப்பட்டு, மாவீரர் தின நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.
பல ஆண்டுகளாகச் சிதைவுகளுக்கு மத்தியில் நினைவுகளைச் சுமந்திருந்த அந்த மண்ணில், இம்முறை பெற்றோர்கள், உறவினர்கள், முன்னாள் போராளிகள் எனப் பலரும் ஒன்றுகூடி, மலர்களாலும் ஈகைச்சுடர்களாலும் தமது அஞ்சலியைச் செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.
உறவுகளை இழந்த இதயங்களின் வலியும், நினைவுகளைச் சுமந்த மக்களின் உணர்வுகளும் ஒன்றிணைந்த இந்த நினைவேந்தல் நிகழ்வு, ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் மிகவும் உணர்வுபூர்வமாக நிறைவடைந்தது.