சென்னை:
தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுகவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்றும், இந்த விஷயத்தில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் அக்கட்சியின் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றக் கூட்டத்தொடரும் அரசியல் விவாதங்களும்:
நாடாளுமன்றக் கூட்டத்தொடர் வரும் நவம்பர் 30-ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், இந்தக் கூட்டத்தொடரில் நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை மசோதாவைத் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரின்போது இந்த மசோதாவை திமுக கடுமையாக எதிர்த்தது. இந்நிலையில், தற்போது இந்த விவகாரத்தில் திமுகவின் நிலைப்பாடு மாறக்கூடும் எனப் பல அரசியல் கட்சிகள் கூறி வரும் சூழலில், இதற்குப் பதிலளிக்கும் வகையில் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
திமுகவின் 2 உறுதியான கோரிக்கைகள்:
அந்தப் பதிவில் மு.க.ஸ்டாலின் குறிப்பிடுகையில், “தொகுதி மறுவரையறையால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து இந்தியாவிலேயே முதன்முதலில் குரல் எழுப்பியது திமுகதான். நியாயமான மறுவரையறை என்ற கோரிக்கையுடன் அகில இந்தியத் தலைவர்களை ஒன்றிணைத்து முதன்முதலில் கூட்டம் நடத்தப்பட்டதும் சென்னையில்தான். தமிழ்நாடு சட்டமன்றம் மற்றும் நியாயமான தொகுதி மறுவரையறைக்கான கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானங்களின்படி, நாம் 2 உறுதியான கோரிக்கைகளை முன்வைத்தோம். நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டால், எக்காரணத்தைக் கொண்டும் தமிழ்நாட்டின் பங்கு தற்போதுள்ள 7.18%-இல் இருந்து குறையக் கூடாது. 1971 மக்கள்தொகை அடிப்படையில் மாநிலங்களுக்கு இடையேயான நாடாளுமன்றப் பிரதிநிதித்துவ விகிதாசாரம் முன்னர் நிலைப்படுத்தப்பட்டவாறே, அடுத்த 25 ஆண்டுகளுக்கும் எந்தவித மாற்றமும் செய்யப்படக் கூடாது,” என்று தெரிவித்துள்ளார்.
நிலைப்பாட்டில் மாற்றமில்லை என உறுதி:
தொடர்ந்து அந்தப் பதிவில் அவர், “எடுத்த இந்த 2 நிலைப்பாட்டிலும் திமுக இன்றும் என்றும் உறுதியாக இருக்கிறது. இதில் எந்த மாற்றமும் இல்லை; சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை. ஊடகங்களில் பரப்பப்படும் ஊகங்களும், முதுகுகுத்திகளின் முணுமுணுப்புகளும் எங்களது நிலைப்பாட்டை எந்த விதத்திலும் அசைத்துப் பார்க்காது. பதவிக்காகக் கொள்கையை உதறிவிட்டுச் செல்லும் கூட்டத்தினர் இதனை உணர வேண்டும். தமிழ்நாட்டின் நலனைக் கழகம் ஒருபோதும் விட்டுக்கொடுக்காது; கொண்ட கொள்கையில் இருந்து தடம் மாறாது,” என்று மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
#MKStalin #DMK #FairDelimitation #ParliamentSession #TamilNaduPolitics #BmNews #TamilNews #BreakingNews #LatestNews #TamilNewsLive