வின்ட்சர் கோட்டையில் பிரித்தானியாவின் நைட்ஹூட் (Knighthood) கௌரவத்தை பெற்ற இலங்கையில் பிறந்த கல்வியாளர் பேராசிரியர் சேர் நிஷான் கனகராஜா, அவர் கல்வி பயின்ற யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரிக்கு பல ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் விஜயம் செய்துள்ளார்.
இந்த விஜயத்தின்போது, அவர் கல்வி கற்ற பாடசாலையின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை சந்தித்த அவர், யாழ்ப்பாணத்தில் சாதாரண மாணவராக தொடங்கிய அவரது வாழ்க்கை பயணம் எவ்வாறு பிரித்தானியாவின் முன்னணி பல்கலைக்கழகம் ஒன்றின் தலைமை பொறுப்பு வரை உயர்ச்சி பெற்றது? என்பதை பகிர்ந்து கொண்டார்.
1973 முதல் 1985 வரை சென். ஜோன்ஸ் கல்லூரியில் கல்வி கற்ற அவர், தற்போது பிரித்தானியாவின் University of Leicester பல்கலைக்கழகத்தின் தலைவராகவும் துணைவேந்தராகவும் பணியாற்றி வருகின்றார்.
“நான் அடிக்கடி என்னை இலங்கையின் மைந்தன் என்று அழைத்து கொள்வேன். நான் பிறந்த மண்ணும் இளமை பருவத்தைக் கழித்த இடமும் எனது வாழ்க்கை மதிப்புகளை உருவாக்கின” என அவர் குறிப்பிட்டார்.
ஆசிரியர்களாக பணியாற்றிய அவரது பெற்றோரிடம் இருந்து கல்வியின் முக்கியத்துவத்தை கற்று கொண்டார் என்று தெரிவித்த அவர், வடக்கு மாகாணத்தை சேர்ந்த இளம் தலைமுறையினர் அவர்களது திறமைகள் மீது நம்பிக்கை கொண்டு உயர்ந்த இலக்குகளை நோக்கி பயணிக்க வேண்டும் என்றும் ஊக்கமளித்தார்.
இந்த உணர்வுபூர்வமான பாடசாலை மீள்வருகையின் போது, கல்லூரியின் மாணவர்களுக்கு உதவும் வகையில் தனிப்பட்ட கல்வி நிதியம் ஒன்றை நிறுவுவதற்கு நன்கொடை வழங்குவதாக அவர் அறிவித்தார்.
இலங்கையின் இன மோதலின்போது உயிரிழந்த சென். ஜோன்ஸ் கல்லூரியை சேர்ந்தவர்களின் நினைவாக இந்த கல்வி நிதியத்தை அர்ப்பணித்தார்.
இதன்போது, “உங்கள் பயணம் முடிவடைந்து விட்டது ஆனால் உங்கள் கதை என்றும் வாழும்” என்ற வாசகம் பொறிக்கப்பட்ட நினைவுப் பலகையை அவர் திறந்து வைத்தார்.