தமது இரண்டு குழந்தைகளுடன் மட்டக்களப்பு கல்லடிப் பாலத்திலிருந்து நபர் ஒருவர் வாவியில் குதித்து உயிரை மாய்த்துக் கொள்ள முற்பட்ட சம்பவத்தால் அங்கு பாரிய பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.
நேற்று (23) இரவு குறித்த பாலத்திற்கு வந்த நபர், அங்கிருந்து வாவியில் குதிக்க முற்பட்டுள்ளார்.
இதன்போது பாலத்தின் ஊடாக மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஒருவர் அதனை அவதானித்த நிலையில், உடன் விரைந்து சென்று குறித்த நபரின் கைகளிலிருந்த 2 பிள்ளைகளையும் பறித்துப் காப்பாற்றியுள்ளார்
எவ்வாறாயினும், குறித்த நபர் பாலத்திலிருந்து வாவிக்குள் குதித்த நிலையில், அங்கு மீன்பிடியில் ஈடுபட்டிருந்தவர்கள் இணைந்து அவரைப் பாதுகாப்பாக மீட்டு கரை சேர்த்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அதனைத் தொடர்ந்து பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் அந்த இரு பிள்ளைகளையும் பொறுப்பேற்றதுடன், குறித்த நபரையும் பொலிஸ் காவலில் எடுத்துள்ளனர்.
நொச்சிமுனையைச் சேர்ந்த குறித்த நபரின் மனைவி தொழில்வாய்ப்புக்காக ஓமான் சென்றுள்ள நிலையில், போலி முகவர் நிலையத்தினால் ஏமாற்றப்பட்டுள்ளதாகப் பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனால் அவருக்கு ஓமானில் இதுவரை தொழில் கிடைக்காத நிலையில், அங்குள்ள அறையொன்றில் தடுத்து வைக்கப்பட்டுச் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
மனைவியை மீட்பதற்கான முயற்சிகள் தோல்வியடைந்த விரக்தியில் தாம் இந்த விபரீத முடிவை எடுத்ததாகவும் அவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இலங்கையில் மன அழுத்தம் மற்றும் தற்கொலை எண்ணங்களுக்கு இரகசியமான, இலவச ஆலோசனை வழங்கும் 24 மணி நேர உதவி எண்கள்:
தேசிய உளநல உதவி எண் 1926 (அழைப்பு மற்றும் குறுஞ்செய்தி), CCCline நெருக்கடி ஆதரவு சேவை 1333, லங்கா லைஃப் லைன் 1375 (வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களுக்கு WhatsApp/Telegram: +94 707 112 112), மற்றும் ஸ்ரீலங்கா சுமித்ரயோ 0707 308 308 அல்லது 011 269 2909 (WhatsApp: 0767 520 620). உடனடி உயிர் ஆபத்து அல்லது அவசர மருத்துவத் தேவைகளுக்கு சுவசெரிய 1990 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.