பேராசிரியரும் கவிஞருமான உருத்திரமூர்த்தி சேரன் அவர்களின் மறைவிற்கு உலகளாவிய தமிழ் சமூகத்துடனும் அறிவுய்திக் குமுகத்துடனும் இலக்கிய ஆர்வலர்களுடனும் இணைந்து கனடியத் தமிழர் பேரவை தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.
நவீன தமிழ் இலக்கியத்திலும் இதழியலிலும், ஆய்வுத் துறையிலும் மாபெரும் ஆளுமையாகத் திகழ்ந்த பேராசிரியர் சேரன், ஈழத் தமிழ் மக்களின் வாழ்வியல் யதார்த்தங்களுக்கு ஒப்பற்ற துணிச்சலுடனும் தார்மீகத் தெளிவுடனும் குரல் கொடுத்தார். தனது புகழ்பெற்ற கவிதைகள், நாடகங்கள், மற்றும் சமூகவியல் ஆய்வுகள் மூலமாக, இடப்பெயர்வின் வலியையும், போரின் அஞரையும், புலம்பெயர் சமூகத்தின் மீள்வலிமையையும், நீதிக்கும் மனித மாண்பிற்குமான நீடித்த தேடலையும் அவர் ஆவணப்படுத்தினார்.
பேராசிரியர் சேரன் பல தலைமுறை மாணவர்களுக்கு ஒரு மதிப்பிற்குரிய ஆசானாகவும் வழிகாட்டியாகவும் மட்டுமல்லாமல், எமது சமூகத்தின் ஒரு முக்கிய அறிவுசார் தூணாகவும் விளங்கினார். நினைவுகளினதும் ஒடுக்கப்படும் மக்களுக்கிடையேயான உணர்வுத் தோழமையினதும் முக்கியத்துவத்தை அவர் எமக்குத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.
கனடியத் தமிழர் பேரவையைப் பொறுத்தவரை, இந்த இழப்பு ஈடுசெய்யமுடியாதது. பேராசிரியர் சேரன் எமது அமைப்பிற்கு ஒரு நம்பிக்கைக்குரிய வழிகாட்டியாகவும் அறிவுரைஞராகவும் இருந்தார். அவரது அறிவாற்றலும், கொள்கைசார் ஆலோசனைகளும், உண்மையின் மீதான தளராத உறுதிப்பாடும் எமது பரிந்துரைக்குரலை வடிவமைக்கவும் உண்மை, நீதி, பொறுப்புக்கூறல் ஆகிய விழுமியங்களில் எமது பணிகளைத் தொடர்ந்தும் நிலைநிறுத்தவும் உதவின.
கனடியத் தமிழர் பேரவையினதும் கனடியத் தமிழர்களினதும் சார்பாக அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் மாணவர்களுக்கும், வாசகர்களுக்கும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவரது எழுத்துக்கள் வரும் பல தலைமுறைகளுக்கு எமக்கு உத்வேகமூட்டும்