பிரிட்டிஷ் கொலம்பியா (B.C.) மாகாணத்தைச் சேர்ந்த வயது குறைந்த சிறுமியை இணையம் மூலம் பாலியல் சுரண்டலுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில், வடமேற்கு ஆல்பர்ட்டாவைச் சேர்ந்த 19 வயது இளைஞர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஆல்பர்ட்டா சட்ட அமலாக்கப் பிரிவு (ALERT) தெரிவித்துள்ளது.
எட்மன்டனில் இருந்து சுமார் 430 கிலோமீட்டர் வடமேற்கே உள்ள பீவர்லாட்ஜ் (Beaverlodge) நகரைச் சேர்ந்த குறித்த இளைஞர், முதலில் ‘ரோப்லாக்ஸ்’ (Roblox) எனும் இணையவழி விளையாட்டுத் தளம் மூலம் சிறுமியுடன் அறிமுகமாகியுள்ளார். பின்னர், அவர்களது உரையாடலைப் பிரபல சமூக வலைதள செயலியான ‘ஸ்னாப்சாட்’ (Snapchat) தளத்திற்கு மாற்றியுள்ளதாக ALERT வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு மாகாணங்களின் இணையவழி சிறுவர் சுரண்டல் தடுப்புப் பிரிவுகள் (ICE) இணைந்து நடத்திய விசாரணையைத் தொடர்ந்து, கடந்த அக்டோபர் 29 ஆம் திகதி அந்த இளைஞர் கைது செய்யப்பட்டார். சிறுமியைத் தவறான நோக்கத்திற்காகத் தூண்டியது (Child luring) மற்றும் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகப் பொருட்களைத் தயாரித்தது, வைத்திருந்தது உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.
“குற்றச் செயல்களுக்கு எல்லைகள் கிடையாது; அதேபோல் பயனுள்ள காவல்துறை நடவடிக்கைகளுக்கும் எல்லைகள் இல்லை” என கெலோவ்னா (Kelowna) RCMP பேச்சாளர் ஸ்டீவன் லாங் தெரிவித்துள்ளார்.
சிறுமியின் பெற்றோர் ஸ்னாப்சாட் செயலியில் இருந்த குறுஞ்செய்திகளைக் கண்டறிந்து காவல்துறையில் புகார் அளித்ததைத் தொடர்ந்தே இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஸ்னாப்சாட் உரையாடலின் போது, அந்த சிறுமி தனது ஆபாசப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பகிருமாறு வற்புறுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள குறித்த இளைஞர், எதிர்வரும் நவம்பர் 18 ஆம் திகதி ஆல்பர்ட்டாவின் கிராண்டே ப்ரேரி (Grande Prairie) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
இளைஞர்களுக்கான இணையவழி அச்சுறுத்தல்கள் சமூக வலைதளங்களுடன் மட்டும் நின்றுவிடாமல், விளையாட்டுத் தளங்களிலும் பரவியுள்ளதை இச்சம்பவம் காட்டுவதாக ‘சில்ட்ரன் ஃபர்ஸ்ட் கனடா’ (Children First Canada) அமைப்பின் நிறுவனர் சாரா ஆஸ்டின் கவலை தெரிவித்துள்ளார். ஆல்பர்ட்டாவில் மட்டும் இணையவழி சிறுவர் சுரண்டல் தொடர்பான வழக்குகள் 2018 ஆம் ஆண்டில் சுமார் 1,050 ஆக இருந்த நிலையில், கடந்த ஆண்டில் கிட்டத்தட்ட 5,700 ஆக ஐந்து மடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.