11.11. 2026 பிற்பகல் 3.00 மணி அளவில் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் மாண்புமிகு இசபெல்லா மார்டின் அம்மையாருடன் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி சந்திப்பு நடத்திய து.
இதில் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ செல்வம் அடைக்கலநாதன் அவர்களும், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஆகிய திரு தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும் ரெலோவின் உப தலைவரும் பேச்சாளரும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் துணைத் தேசிய அமைப்பாளருமான குருசுவாமி சுரேந்திரன் அவர்களும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் திரு . செந்தில்நாதன் மயூரன் ஆகியோர் கலந்து கொண்டனர்
தமிழ் மக்களினுடைய நீண்ட கால கோரிக்கையான நிரந்தரமான அரசியல் தீர்வு மற்றும் காத்திரமான பொருளாதார அபிவிருத்தி என்பவற்றை தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் முன்னிலைப்படுத்திய தற்போதைய அரசு அது சம்பந்தமாக எந்த நகர்வுகளையும் மேற்கொள்ளாமல் இருப்பது தமிழ் மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தி உள்ளது என்பது சுட்டிக்காட்டப்பட்டது.
அரசாங்கம் நடைமுறைப்படுத்த உள்ள பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாப்பதற்கான சட்ட மசோதா (PSTA) மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல் மசோதா (OCB) ஆகியவற்றை நடைமுறைப்படுத்துவதன் மூலம் ஒட்டுமொத்த நாட்டிற்கும் அதிலும் சிறுபான்மை இன மக்கள் எதிர்கொள்ள இருக்கும் அபாயங்களை பற்றி எடுத்துரைக்கப்பட்டது.
குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்களின் நீண்ட கால கோரிக்கையான நிரந்தர அரசியல் தீர்வு, காணி அபகரிப்பு, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம், யுத்த குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் மற்றும் இனப்படுகொலைக்கான நீதிப் பொறிமுறை, மற்றும் திட்டமிட்டு பின் போடப்பட்டிருக்கும் மாகாண சபை தேர்தல்கள் என்பவற்றிற்கு எதிராக தொடர்ந்து போராடி வருகின்ற நிலையிலே இந்த சட்டமூலங்களின் ஊடாக அந்தப் போராட்டங்களை ஒடுக்கவும் தனி மனிதர்களை குறி வைத்து வகை தொகை இன்றி கைதுகளை மேற்கொள்ளவும் வழி வகுக்கும் அபாயத்தை பற்றி சுட்டிக்காட்டப் பட்டது.
மேலும் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க வேண்டும் என்று மனித உரிமை பேரவையின் அறிக்கைகள் தெளிவாக கூறி வருகின்ற போதிலும் அரசாங்கம் அதை முற்றாக நீக்குவதற்கு பதிலாக, அதற்கு பதிலீடான ஆபத்தான சட்டங்களை நடைமுறைப்படுத்த முனைவது தமிழ் மக்களுக்கும் ஒட்டுமொத்த நாட்டுக்கும் ஆபத்தான விடயம் என்பது சுட்டிக்காட்டப்பட்டது.
தொடர்ந்து மாகாண சபை தேர்தல்களை அரசாங்கம் இழுத்தடித்து வருவது எமது பிரதேசங்களில் மாகாண சபையின் நிர்வாக கட்டமைப்பு இல்லாமையினால் பல்வேறு அரச நிறுவனங்களினால் காணி அபகரிப்புக்கும் சட்டவிரோத குடியேற்றங்களுக்கும் வழிவகுக்கிறது என்பதும் முன்வைக்கப்பட்டது. வட மாகாணத்தில் அபகரிக்கப்பட்ட காணிகள் விடுவிக்கப்படாமல் இருக்கும் அதே நேரத்தில் கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களின் மேச்சல் தரையான மாதவனை மயிலத்தமடு பிரதேசங்களில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள், பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள், அங்குள்ள தமிழ் மக்களின் பாரம்பரிய மேய்ச்சல் தரையை அபகரித்து கால்நடை வளர்ப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் சூழ்நிலை நிலவுவது விளக்கப்பட்டது.
நாட்டின் தற்கால சூழலில் நடைபெறும் அரசியல் விடயங்களைப் பற்றி கலந்துரையாடிய வேளையில், அளவுக்கு அதிகமான வரிகளினாலும் கட்டுப்படுத்த முடியாத விலைவாசி உயர்வினாலும் வறுமைக்கோட்டுக்கு கீழ் இருக்கும் மக்கள் மாத்திரம் அல்ல மற்றவர்களும் வாழ்வாதார ரீதியாக கடும் பாதிப்புக்கு உள்ளாகி வருவதும் எடுத்துரைக்கப் பட்டது.
இவற்றிற்கு பதில் அளித்த உயர் ஸ்தானிகர், ஐநா மனித உரிமை விடையங்களில் கனேடிய அரசு தொடர்ந்தும் உறுதியுடன் செயல்பட்டு வருவதை சுட்டிக்காட்டினார். இலங்கை அரசோடு தாம் மேற்கொள்ளும் விடயங்களில் கனடிய மக்கள் சார்பிலே குறிப்பாக அங்கு வாழும் இலங்கை மக்களின் பிரதிநிதியாகவும் செயல்படுவதை சுட்டிக்காட்ட தவறுவதில்லை என தெரிவித்தார்.
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் கடந்த காலங்களில் பல்வேறு பெயர்களில் சமர்ப்பிக்கப்பட்ட வேளைகளிலும் நாங்கள் அவற்றை கவனமாக அவதானித்து வந்துள்ளோம்.
இலங்கையில் மேற்கொள்ளப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற செயல்கள் கனடாவிலும் பிரதிபலிப்பை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்தாரர்.
அவற்றை கட்டுப்படுத்துவதற்காக தாங்கள் இலங்கையோடு சேர்ந்து செயல்பட்டு வந்தாலும், காட்டுமிராண்டித்தனமான சட்டங்கள் இயற்றப்படுவதை தாங்கள் ஒருபொழுதும் ஏற்றுக் கொள்வதில்லை என்றும் தெரிவித்தார். இப்பொழுது இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்த இருக்கும் சட்டங்களை பற்றி தாங்கள் ஏற்கனவே அவர்களிடம் தமது கரிசனைகளை வெளிப்படுத்தி உள்ளதாகவும் தெரிவித்தார்.
இலங்கையின் பொருளாதார அபிவிருத்தியில் தமது பங்களிப்பை மேற்கொண்டு வருகின்ற பொழுதிலும் வடக்கு கிழக்கிலே குறிப்பாக தமிழ் மக்களினுடைய அபிவிருத்தி சம்பந்தமாக பல வேலை திட்டங்களை கனியடி அரசு முன்னெடுத்து வருவதை சுட்டி காட்டினார்.
கனடாவில் உள்ள புலம்பெயர் உறவுகளின் முதலீடுகளை வடக்கு கிழக்கிலே ஏற்படுத்துவதற்கும் ஊக்குவிப்பதற்கும் அதனுடாக பொருளாதார அபிவிருத்தியை முன்னெடுப்பது சம்பந்தமாகவும் தாங்கள் பல வேலை திட்டங்களை முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மனித உரிமை விடயங்கள் சம்பந்தமாகவும் தமிழ் மக்களினுடைய பொருளாதார அபிவிருத்தி சம்பந்தமாகவும் தாம் தொடர்ந்து அக்கறை கொண்டுள்ளோம் என்று தெரிவித்தார்