இலங்கையில் புதிய வான்வழிப் போக்குவரத்து முறையை அறிமுகப்படுத்தும் முதற்கட்ட நடவடிக்கையாக, மின்சாரத்தில் இயங்கும் ஆளில்லா பயணிகள் விமான சேவையின் முதலாவது அதிகாரப்பூர்வ சோதனை ஓட்டம் கொழும்பு துறைமுக நகரில் இன்று (நவம்பர் 11) நடைபெற்றது.
விமான ஓடுபாதை தேவையின்றி இரண்டு பயணிகளை ஏற்றிச் செல்லும் திறன் கொண்ட ‘EHang E216’ ரக மின்சார செங்குத்து டேக்-ஆஃப் மற்றும் லேண்டிங் (eVTOL) விமானமே இந்தப் பரிசோதனைக்காகப் பயன்படுத்தப்படவுள்ளது.
ஆளில்லா பயணிகள் ட்ரோன் தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் பெற்ற சீனாவின் ‘EHang’ நிறுவனத்துடன் கடந்த ஆகஸ்ட் மாதம் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் நடத்திய ஆலோசனைகளைத் தொடர்ந்து இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அமைச்சக அதிகாரிகள், சிவில் விமான போக்குவரத்து அதிகார சபை மற்றும் பாதுகாப்புத் துறையினர் உள்ளிட்ட பல நிறுவனங்களின் ஒருங்கிணைப்புடன் துறைமுக நகர் வளாகத்தில் சுமார் ஆறு மாதங்களுக்கு இந்தச் சோதனை ஓட்டங்கள் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சீனாவிலிருந்து கொண்டுவரப்பட்ட இந்த E216 விமானமானது 16 ப்ரொப்பல்லர்கள், 12 மின்கலத் தொகுப்புகள் மற்றும் மூன்று விமானக் கட்டுப்பாட்டு அமைப்புகளுடன் கூடிய அதிநவீன தொழில்நுட்பக் கட்டமைப்புடன் தயாரிக்கப்பட்டுள்ளதுடன், மத்தியக் கட்டுப்பாட்டு மையத்திலிருந்து தொலைவழியாக இயக்கப்படுகிறது.
இந்தச் சோதனை ஓட்டம் வெற்றியடையும் பட்சத்தில், எதிர்காலத்தில் சிகிரியா மற்றும் தீவுப் பகுதிகள் போன்ற முக்கிய சுற்றுலாத் தலங்களில் வான்வழிச் சுற்றுலாப் பயணங்களை மேம்படுத்த இது பெரிதும் வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.