இலங்கையின் 11 வயதுக்குட்பட்டோர் பெண்கள் விரைவு சதுரங்கத் தரவரிசையில் இரண்டாம் இடத்தையும், 1670 சர்வதேச மதிப்பீட்டுப் புள்ளிகளுடன் உலகளவில் 120ஆம் இடத்தையும் பெற்று திருகோணமலை மாணவி நிவாஷ்னி சாதனை புரிந்துள்ளார்.
இவர் சர்வதேச சதுரங்கக் கூட்டமைப்பின் சர்வதேச விரைவு சதுரங்க மதிப்பீட்டின் அடிப்படையில், 11 வயதுக்குட்பட்டோர் பிரிவில் 1670 புள்ளிகளைப் பெற்று இலங்கையில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். மேலும், சர்வதேச அளவில் செயற்பாட்டிலுள்ள இதே பிரிவில் மதிப்பீடு பெற்ற வீராங்கனைகளில் 120ஆம் இடத்தையும் பெற்றுள்ளார்.
நடப்பாண்டில் நடைபெற்ற 15ஆவது கண்டி சர்வதேச திறந்தநிலை சதுரங்கப் போட்டியில், 12 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் பங்கேற்ற நிவாஷ்னி, விரைவு நிலைப் போட்டியில் சம்பியன் பட்டத்தையும், பிளிட்ஸ் பிரிவில் 2ஆம் இடத்தையும், கிளாஸிக்கல் பிரிவில் 10ஆம் இடத்தையும் பெற்று மூன்று பிரிவுகளிலும் சிறப்பான பெறுபேறுகளைப் பதிவு செய்தார். ஒரே போட்டியில் மூன்று பிரிவுகளிலும் திறமையை வெளிப்படுத்தியமை அவரது சதுரங்க ஆற்றலையும் தொடர்ச்சியான முன்னேற்றத்தையும் எடுத்துக்காட்டுகின்றது.
இவ்வாண்டு நடைபெற்ற ஸ்ரீலங்கா பாடசாலைகள் சதுரங்கச் சங்கத்தின் தனிநபர் சம்பியன்ஸ் போட்டியின் 12 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான பிரிவில் பங்கேற்ற நிவாஷ்னி, 7 சுற்றுகளில் 5 புள்ளிகளைப் பெற்று தேசிய மட்டச் சிறப்பு வெற்றி நிலையையும் பெற்றார். இந்தப் போட்டியின் மூலம் தனது சர்வதேச சதுரங்க மதிப்பீட்டில் சுமார் 35 புள்ளிகள் மதிப்பீட்டு அதிகரிப்பையும் பெற்றுள்ளார்.
திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி மாணவியான ஜெகதீஷன் நிவாஷ்னி, சதுரங்க விளையாட்டில் தொடர்ச்சியாகப் பல சாதனைகளைப் படைத்து திருகோணமலை மாவட்டத்திற்கும் தனது பாடசாலைக்கும் பெருமை சேர்த்து வருகின்றார்.
திருகோணமலை சதுரங்கப் பயிற்சி நிலையத்தின் மூலம் இவர் தனது பயிற்சிகளைப் பெற்றுள்ளார். கோணேசலிங்கம் ஜெகதீசன், ஷோபனா ஜெகதீசன் தம்பதிகளின் மகளான இவர், 2024ஆம் ஆண்டில் இலங்கை தேசிய மட்டத் தெரிவுப் போட்டியின் மூலம் பொதுநலவாய சதுரங்கச் சம்பியன்ஸ் போட்டிக்கான குழுவிற்கும் தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.