நாட்டின் வர்த்தக நாமங்களை பதிவுசெய்யும் நடைமுறையை எளிய, மற்றும் இலகுவானதாக மாற்றும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள எளிய மற்றும் ஒருங்கிணைந்த வணிகப் பெயர் பதிவு (Simplified and Unified Business Name Registration – BNR) முன்னோடித் திட்டம் அநுராதபுரத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சு மற்றும் மாகாண சபைகளின் ஒத்துழைப்புடன் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் முக்கிய நோக்கம், தனிநபர் மற்றும் பங்காண்மை வணிகப் பதிவு நடைமுறைகளை எளிமையாக்கி, நாடு முழுவதும் ஒரே மாதிரியான முறையை அறிமுகப்படுத்துவதாகும்.
கடந்த 1918ஆம் ஆண்டு முதல் நடைமுறையிலிருந்த பழமையான முறையில், காணி உரிமம் தொடர்பான ஆவணங்கள் மற்றும் பல்வேறு நிறுவனங்களின் அனுமதிகளைப் பெறுவது போன்ற சிக்கலான தேவைகள் காணப்பட்டன.
எனினும், புதிய திருத்தத்தின் மூலம் வணிகப் பெயர் பதிவு மற்றும் ஏனைய சட்டப்பூர்வ உரிமங்களைப் பெறும் நடைமுறைகள் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டு, அடிப்படை அடையாளச் சான்றுகள் மற்றும் வசிப்பிடத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு 5 நாட்களுக்குள் பதிவை முடிப்பதற்கு வாய்ப்பளிக்க எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் முதற்கட்டமாக மத்திய, வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 20 பிரதேச செயலகப் பிரிவுகளில் 3 மாத கால முன்னோடித் திட்டமாக இது செயல்படுத்தப்படவுள்ளது.
குறித்த முன்னோடித் திட்டத்தின் முன்னேற்றத்தை மதிப்பீடு செய்த பின்னர், இந்த நடைமுறையை நாடு முழுவதும் விரிவுபடுத்தவும், எதிர்காலத்தில் டிஜிட்டல் முறைமையின் ஊடாக இச்சேவையை மேலும் திறம்பட வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
புதிய வணிகமொன்றை ஆரம்பிக்க எதிர்பார்க்கும் நபர்களுக்கும் சிறு மற்றும் நடுத்தர அளவு தொழில்முனைவோருக்கும் நிலவும் நிர்வாகத் தடைகளைக் குறைத்து, உத்தியோகபூர்வ பொருளாதாரக் கட்டமைப்பிற்குள் இலகுவாகப் பிரவேசிப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்துவதே இத்திருத்தத்தின் பிரதான நோக்கமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.