சென்னை:
தீபாவளி பண்டிகை முடிந்து பொதுமக்கள் சென்னை திரும்பி வரும் நிலையில், உள்நாட்டு விமானங்களில் கட்டணம் பல மடங்கு அதிகரித்துள்ளதால் பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பயணிகள் கூட்டம்:
தீபாவளி பண்டிகையைச் சொந்த ஊர்களில் கொண்டாடுவதற்காகச் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வசிக்கும் வெளியூரைச் சேர்ந்தவர்கள் ஒட்டுமொத்தமாக ரயில்கள், பேருந்துகள், கார்கள் மற்றும் விமானங்களில் தங்களது சொந்த ஊர் நோக்கிப் புறப்பட்டுச் சென்றனர். இந்த நிலையில் தீபாவளி பண்டிகை நேற்று (நவம்பர் 8) முடிவடைந்த நிலையில், இன்றுடன் (நவம்பர் 9) அரசு விடுமுறையும் முடிவடைகிறது. இதனைத் தொடர்ந்து, நாளை முதல் அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் வழக்கம் போல் செயல்படத் தொடங்க உள்ளன. இதையடுத்து வெளியூர்களுக்குச் சென்றவர்கள் ஒட்டுமொத்தமாக இன்று காலை முதலே சென்னைக்குத் திரும்பி வந்து கொண்டு இருக்கின்றனர்.
டிக்கெட்டுகள் இல்லை:
அவர்களில் பலர் விமானங்களில் சென்னைக்குத் திரும்பி வருவதால் வெளியூர்களிலிருந்து சென்னைக்கு வரும் உள்நாட்டு விமானங்களில் இருக்கைகள் அனைத்தும் மிக வேகமாக நிரம்பின. இந்நிலையில், இன்று மாலை மற்றும் இரவு வரும் விமானங்கள் அனைத்திலும் டிக்கெட்டுகள் இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்துத் தமிழ்நாட்டின் தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை, சேலம் உள்ளிட்ட நகரங்களிலிருந்தும், வடமாநிலங்களான டெல்லி, கொல்கத்தா, மும்பை, அகமதாபாத், புவனேஸ்வர் உள்ளிட்ட இடங்களில் இருந்தும் சென்னைக்கு வரும் விமான டிக்கெட் கட்டணங்கள் பல மடங்கு அதிகரிப்பால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
கட்டண விவரம்:
தூத்துக்குடி – சென்னைக்கு சாதாரண நாட்களில் கட்டணம் 7,045 ரூபாயாக இருந்த நிலையில் இன்றைய கட்டணம் 17,639 ரூபாயாக உள்ளது. மதுரை – சென்னைக்கு 4,673 ரூபாயிலிருந்து 11,877 ரூபாயாகவும், திருச்சி – சென்னைக்கு 4,954 ரூபாயிலிருந்து 14,666 ரூபாயாகவும், கோவை – சென்னைக்கு 4,350 ரூபாயிலிருந்து 6,870 ரூபாயாகவும், சேலம் – சென்னைக்கு 3,832 ரூபாயிலிருந்து 13,098 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. வடமாநிலங்களை பொறுத்தவரை டெல்லி – சென்னைக்கு 10,167 ரூபாயிலிருந்து 15,100 ரூபாயாகவும், கொல்கத்தா – சென்னைக்கு 7,681 ரூபாயிலிருந்து 9,048 ரூபாயாகவும், மும்பை – சென்னைக்கு 6,160 ரூபாயிலிருந்து 11,808 ரூபாயாகவும், அகமதாபாத் – சென்னைக்கு 7,470 ரூபாயிலிருந்து 21,944 ரூபாயாகவும், புவனேஸ்வர் – சென்னைக்கு 7,199 ரூபாயிலிருந்து 26,209 ரூபாயாகவும் கட்டணம் கடுமையாக அதிகரித்துள்ளது.
கட்டாயப் பயணம்:
அனைத்து உள்நாட்டு வழித்தடங்களிலும் சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்துள்ளன. இதனால் நடுத்தர வர்க்கப் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். ஆனாலும் சென்னையில் நாளை பணிக்குச் செல்ல வேண்டும் என்பதால் கட்டண உயர்வைப் பற்றி யோசிக்காமல் வேறு வழியின்றிப் பயணிகள் கூட்டம் கூட்டமாக விமானங்களில் பயணம் செய்து சென்னைக்குத் திரும்பிக் கொண்டு இருக்கின்றனர்.