பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பதற்கான சட்டமூலத்தை (Protection of the State from Terrorism) உடனடியாக மீளப்பெறுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி, கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத் தொழிலாளர்களும் தொழிற்சங்கங்களும் இணைந்து போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.
கட்டுநாயக்க அவறிவத்த நகரில் நேற்று (04) மாலை 5 மணிக்கு இந்தப் போராட்டம் நடைபெற்றது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதாகக் கூறிவரும் அரசாங்கம், அதற்குப் பதிலாகப் புதிய சட்டமூலமொன்றைக் கொண்டுவர முயற்சிப்பதாகப் போராட்டக்காரர்கள் குற்றஞ்சாட்டினர்.
புதிய சட்டமூலத்தில் பாதுகாப்புச் செயலாளருக்கு அதிக அதிகாரங்களை வழங்குதல், நீதிமன்ற அனுமதியின்றிக் கைது செய்தல் மற்றும் பல்வேறு அமைப்புகளைத் தடை செய்தல் போன்ற சர்ச்சைக்குரிய சரத்துகள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
மேலும், 2027ஆம் ஆண்டில் ஜி.எஸ்.பி. பிளஸ் (GSP+) வரிச்சலுகை முடிவடையவுள்ள நிலையில், அந்தச் சலுகை இழக்கப்பட்டால் ஆடைத் தொழில்துறையில் சுமார் 74,000 வேலைவாய்ப்புகள் ஆபத்துக்குள்ளாகும் என்றும் போராட்டக்காரர்கள் எச்சரித்தனர்.