பிரான்ஸில் உள்ள மூன்று பிராந்திய இரத்த வங்கிகளின் குளிர்சாதனப் பெட்டிகளைக் கண்காணிக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் கட்டமைப்புகள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் திங்கட்கிழமை அதிகாலை வரை இடம்பெற்ற இந்தத் தாக்குதலால் இரத்த விநியோகத்தில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என பிரான்ஸ் இரத்த நிறுவனம் (EFS) தெரிவித்துள்ளது.
தாக்குதல் குறித்த எச்சரிக்கை கிடைத்ததும், பணியாளர்கள் இரத்தப் பொதிகளை இணையத்துடன் இணைக்கப்படாத மாற்றுக் குளிர்சாதனப் பெட்டிகளுக்கு மாற்றியுள்ளனர்.
இதேவேளை, ஐரோப்பாவின் எட்டு நாடுகளில் உள்ள பல்பொருள் அங்காடிகளின் குளிர்சாதனப் பெட்டிகளையும் ஹேக்கர்கள் ஊடுருவிச் செயலிழக்கச் செய்துள்ளனர். இதனால் பெருமளவிலான உணவுப் பொருட்களை அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட குளிர்சாதனப் பெட்டிகளுக்கான தொலைநிலை அணுகல் வசதிகள் முடக்கப்பட்டுள்ளதுடன், தாக்குதல் தொடர்பான விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இணையத்துடன் இணைக்கப்பட்ட அத்தியாவசியக் கட்டமைப்புகளின் பாதுகாப்பு குறித்த கவலையை இந்தச் சம்பவங்கள் ஐரோப்பிய நாடுகளிடையே அதிகரித்துள்ளன.