உலகளாவிய பாதுகாப்பு அச்சுறுத்தல்கள், இணையத் தாக்குதல்கள், வெளிநாட்டுத் தலையீடுகள் மற்றும் பொருளாதார நிச்சயமற்ற தன்மை அதிகரித்து வரும் நிலையில், கனடாவின் தேசிய பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான புதிய மூலோபாயத் திட்டத்தை பிரதமர் Mark Carney வெளியிட்டுள்ளார்.
“The Plan for a Stronger Canada” – வலுவான கனடாவிற்கான திட்டம் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த மூலோபாயம், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலான காலத்தில் கனடா வெளியிட்டுள்ள முதலாவது விரிவான தேசிய பாதுகாப்புத் திட்டமாகும்.
கனடாவின் இறையாண்மை, பொருளாதாரப் பாதுகாப்பு, இராணுவ வலிமை, பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் புலனாய்வுத் திறன்களை ஒருங்கிணைத்து மேம்படுத்துவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
வேகமாக மாறிவரும், அதிக ஆபத்துகளும் பிளவுகளும் நிறைந்த உலகில், கனடா தனது இறையாண்மையைப் பாதுகாக்கும் திறனையும் புதிய அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வலிமையையும் தனது எதிர்காலத்தைத் தானே தீர்மானிக்கும் உறுதியையும் கொண்டிருக்க வேண்டும் எனப் பிரதமர் கார்னி தெரிவித்துள்ளார்.
புதிய தேசிய பாதுகாப்புத் திட்டத்தின் 5 முக்கிய முன்னுரிமைகள்!
1. பொருளாதாரப் பாதுகாப்பை வலுப்படுத்துதல்
2. வெளிநாட்டு உறவுகள் மற்றும் சர்வதேச கூட்டாண்மைகளை விரிவுபடுத்துதல்
3. கனடிய ஆயுதப்படைகளை நவீனமயப்படுத்துதல்
4. பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் குற்றத்தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துதல்
புதிய திட்டத்தின் கீழ் பின்வரும் அச்சுறுத்தல்களுக்கு எதிராக நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படவுள்ளன:
🔹 வெளிநாட்டு அரசுகளின் தலையீடுகள் மற்றும் உளவு நடவடிக்கைகள்.
🔹 வன்முறைத் தீவிரவாதம் மற்றும் நாடுகடந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்கள்.
🔹 மிரட்டிப் பணம் பறித்தல் மற்றும் மோசடிகள்.
🔹 பணமோசடி மற்றும் நிதிக் குற்றங்கள்.
🔹 சட்டவிரோத ஆயுதங்கள், போதைப்பொருட்கள் மற்றும் மனிதக் கடத்தல்.
🔹 இணையக் குற்றங்கள் மற்றும் முக்கிய உட்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்கள்.
5. கனடாவின் புலனாய்வுத் திறன்களை மேம்படுத்துதல்
2025ஆம் ஆண்டு மத்திய வரவுசெலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட 10.9 பில்லியன் டொலர் ஐந்தாண்டு முதலீடு, கனடிய தேசிய பாதுகாப்புத் துறை, ஆயுதப்படைகள் மற்றும் தகவல் தொடர்புப் பாதுகாப்பு நிறுவனத்தின் டிஜிட்டல் உட்கட்டமைப்புகளை மேம்படுத்தப் பயன்படுத்தப்படவுள்ளது.
இதன்மூலம் இணையத் தாக்குதல்களை எதிர்கொள்ளும் கனடாவின் திறனை அதிகரிப்பதே அரசின் நோக்கமாகும்.
இந்தத் தொகை இன்றைய அறிவிப்பில் புதிதாக ஒதுக்கப்பட்ட நிதியல்ல. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட முதலீடு என்பது குறிப்பிடத்தக்கது.
கனடாவின் இறையாண்மையைப் பாதுகாப்பதற்கும், ஆயுதப்படைகளை வலுப்படுத்துவதற்கும், தேசிய நலன்களை முன்னெடுப்பதற்கும் இந்தத் திட்டம் முக்கியமானது என தேசிய பாதுகாப்பு அமைச்சர் David McGuinty தெரிவித்துள்ளார்.
கனடாவின் ஜனநாயக அமைப்புகள், பொதுமக்கள் மற்றும் தேசிய பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான திறன்களையும் கூட்டாண்மைகளையும் வலுப்படுத்துவதாகப் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் கேரி ஆனந்தசங்கரி குறிப்பிட்டுள்ளார்.
2004ஆம் ஆண்டுக்குப் பின்னர் வெளியிடப்படும் இந்த விரிவான தேசிய பாதுகாப்பு மூலோபாயம், நாட்டின் பாதுகாப்பை இராணுவ நடவடிக்கைகளுடன் மட்டும் தொடர்புபடுத்தாமல், பொருளாதாரம், தொழில்நுட்பம், எரிசக்தி, வர்த்தகம், பொதுப் பாதுகாப்பு மற்றும் புலனாய்வு ஆகியவற்றையும் உள்ளடக்கியதாக விரிவுபடுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.