ஈரானிற்கு திரும்பி செல்ல முடியாத நிலையில் அந்த நாட்டை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட எண்ணெய் கப்பல்கள் இலங்கையின் தென்மேற்கு கரையோரத்திற்கு வெளியே நங்கூரமிட்டுள்ளதாக தெரிவித்துள்ள அமெரிக்காவை சேர்ந்த வோல்ஸ்ரீட் ஜேர்னல் இந்த கப்பல்கள் எரிபொருள் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளன கப்பலில் உள்ளவர்கள் போதிய குடிநீர் மற்றும் உணவு இன்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்காவின் வோல்ஸ்ரீட் ஜேர்னல் மேலும் தெரிவித்துள்ளதாவது
ஈரான் எரிபொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் சீனா போன்ற நாடுகளுக்கு சட்டவிரோதமாக எரிபொருளை கொண்டு சென்ற கப்பல்களே தற்போது இலங்கை கடற்பரப்பிற்கு வெளியே நங்கூரமிட்டுள்ளன.
ஈரானின் எண்ணெய் விநியோகத்துடன் தொடர்புடைய கப்பல்களுக்கு சேவைகளை வழங்கவேண்டாம் என அமெரிக்கா உலக நாடுகள் மீது அழுத்தங்களை திணித்து வருகின்றது.
ஈரானின் எரிபொருளை இறக்கிய பிறகு மீண்டும் அவற்றை கொண்டு வருவதற்காக செல்லும் கப்பல்கள் தற்போதுஈரானிய துறைமுகங்களுக்கு செல்;ல முடியாத அல்லது செல்ல விரும்பாத நிலையில் உள்ளன.
இவை நங்கூரமிடும் இடமாக இலங்கையின் விசேட பொருளாதார வலயத்திற்கு வெளியே உள்ள கடற்பகுதி காணப்படுகின்றது.
இலங்கை அதிகாரிகள் அந்த கப்பல்களை தொடர்ந்தும் கண்காணித்துவரும் அதேவேளை அந்த கப்பல்கள் தங்கள் கடற்பகுதிக்கு வெளியே இருப்பதால் தங்களது அதிகார வரம்பிற்குள் இல்லை என தெரிவிக்கின்றனர்.
இலங்கையை பொருத்தவரை இந்த எண்ணெய் கப்பல்களின் பிரசன்னம் இலங்கைக்கு இராஜதந்திர கடல்சார் நெருக்கடிகளை உருவாக்கியுள்ளது.
இந்த கப்பல்கள் இலங்கையின் கடற்பரப்பிற்கு வெளியே உள்ளதால் கப்பல்கள் தொடர்பாக அதிகாரம் செலுத்த முடியாத நிலையில் இலங்கை காணப்படுகின்றது.
தடை செய்யப்பட்ட கப்பல்களுக்குஉள்ளுர் நிறுவனங்கள் உதவிகளை வழங்கினால் அவை நிதி மற்றும் சட்ட சிக்கல்களை எதிர்கொள்ளக்கூடும்.
நீண்டநாட்களாக தரித்து நிற்கும் எண்ணெய் கப்பல் பணியாளர்களின் நலனே உடனடி கரிசனைக்குரிய விடயமாக உள்ளது என அமெரிக்காவின் வோல்ஸ்ரீட் ஜேர்னல் தெரிவித்துள்ளது.