கொழும்பு பொரளைப் பகுதியில் அமைந்துள்ள ரூ. 1.58 பில்லியனுக்கும் அதிகமான பெறுமதியுடைய அரச காணிக் தொடர்பில் இடம்பெற்ற ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து, காணி உரிமை நிர்ணயத் திணைக்களத்தின் முன்னாள் விசாரணை ஆணையாளர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் (CIABOC) கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் நிஷாந்த மோகன் விக்கிரமசிங்க என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர் இன்று (29) காலை 9.45 மணியளவில் கைது செய்யப்பட்டதாகவும் லஞ்ச ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
குற்றச்சாட்டின் விபரம்:
சந்தேகநபர் விசாரணை ஆணையாளராகப் பணியாற்றிய காலத்தில், தனது உத்தியோகபூர்வ அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, திணைக்களத்தின் உத்தியோகபூர்வ கடிதத் தலைப்பில் ஒழுங்கற்ற விசாரணை இலக்கத்தின்கீழ் அறிக்கை ஒன்றை வெளியிட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
பொரளை, எலியட் வீதியில் இலக்கம் 30 எனும் முகவரியில் அமைந்துள்ள 1.0982 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட அரசிற்குச் சொந்தமான காணியை, தனியார் ஒருவருக்குச் சொந்தமான நிலமாக அந்த அறிக்கையில் அவர் சித்தரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
குறித்த காணியின் சந்தைப் பெறுமதி சுமார் ரூ. 1.586 பில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.
சந்தேகநபரின் இந்தச் செயற்பாடானது அரசிற்குப் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியதுடன், வேறு ஒரு தரப்பிற்குச் சாதகமான நன்மையை வழங்கி லஞ்ச ஊழல் குற்றத்தைச் புரிய வழிவகுத்துள்ளதாக ஆணைக்குழு குற்றஞ்சாட்டியுள்ளது.