திருச்சி–சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் அருகே இன்று (செப். 24) அதிகாலை கார், முன்னால் சென்ற ஆம்னி பேருந்தின் பின்புறத்தில் மோதி ஏற்பட்ட கோர விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
மேலும், 3 பேர் படுகாயமடைந்து அரசு மருத்துவமனைகளில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகாலை நேரத்தில் நிகழ்ந்த இந்த விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ராமநாதபுரம் மாவட்டம் பிள்ளையார்குளம் கிராமத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் பிரபாகரன் (30), முதுகுளத்தூர் பகுதியைச் சேர்ந்த அம்மாசி மகன் கார்த்திக் (38), கண்ணாயிரம் மகன் காளீஸ்வரன் (25), ஓரிவயல் பகுதியைச் சேர்ந்த முருகேசன் மகன் கண்ணதாசன் (22), கார்த்தியின் மனைவி சூர்யா (35), தேவிபட்டினத்தைச் சேர்ந்த சபரிகன் மகன் ஜான் கென்னடி (35), ரவி மனைவி சரண்யா (23) ஆகிய 7 பேரும் காரில் சென்னைக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில், இன்று அதிகாலை சுமார் 2.30 மணியளவில் பெரம்பலூர் மாவட்டம் துறைமங்கலம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே கார் சென்று கொண்டிருந்தபோது, முன்னால் சென்று கொண்டிருந்த ஏ.வி.கே. ஆம்னி பேருந்தின் பின்புறத்தில் எதிர்பாராதவிதமாக வேகமாக மோதியதாகக் கூறப்படுகிறது.
மோதிய வேகத்தில் காரின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. காரில் இருந்தவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்டனர்.