யாழ்ப்பாணம் செம்மணிப் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட சுண்டுக்குளி மகளிர் கல்லூரி மாணவி குமாரசாமி கிருஷாந்தி உள்ளிட்டோரின் 30ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று திங்கட்கிழமை மாலை செம்மணியில் நடைபெற்றது.
இதன்போது, கிருஷாந்தியுடன் செம்மணிப் பகுதியில் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட ஏனையவர்களும் நினைவுகூரப்பட்டு, அவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
1996 செப்டம்பர் 7ஆம் திகதி, 18 வயதான கிருஷாந்தி செம்மணி பகுதியில் இராணுவத்தினரால் தடுத்து வைக்கப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதாக பதிவுகள் தெரிவிக்கின்றன. அவரைத் தேடி சென்ற அவரது தாயார் குமாரசாமி இராசம்மா, சகோதரர் குமாரசாமி பிரணவன் மற்றும் குடும்ப நண்பர் சிதம்பரம் கிருபாமூர்த்தி ஆகியோரும் கொல்லப்பட்டனர். நால்வரின் உடல்களும் பின்னர் செம்மணி பகுதியில் புதைக்கப்பட்டிருந்தன.
இந்த வழக்கில் 1998ஆம் ஆண்டு இராணுவத்தைச் சேர்ந்த சிலர் குற்றவாளிகளாகத் தீர்ப்பளிக்கப்பட்டு தண்டனை பெற்றனர். பின்னர் செம்மணி பகுதியில் இடம்பெற்ற அகழ்வுப் பணிகள், மேலும் பல மனித எச்சங்கள் தொடர்பான கேள்விகளை எழுப்பியுள்ளன.
இவ்வாண்டின் 30ஆவது ஆண்டு நினைவேந்தல், கிருஷாந்தி உள்ளிட்டோரின் நினைவைப் பேணுவதுடன், செம்மணி உள்ளிட்ட பகுதிகளில் புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் மனித எச்சங்கள் தொடர்பில் உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் குறித்த கோரிக்கைகளையும் மீண்டும் முன்னிறுத்தும் நிகழ்வாக அமைந்துள்ளது.