உடின் துங்கா, நேபாளம் — நேபாளம் மற்றும் சீனா எல்லைப் பகுதியில் புதன்கிழமை ஏற்பட்ட கடுமையான திடீர் வெள்ளப்பெருக்கில் குறைந்தது 98 பேர் உயிரிழந்துள்ளனர். வெள்ளம் குடியிருப்புப் பகுதிகளைச் சூறையாடியதோடு, போக்குவரத்துப் பாதைகளையும் முடக்கியதில் சுற்றுலாப் பயணிகள், தொழிலாளர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் காணாமல் போயுள்ளனர்.
நேபாளப் பிரதமரின் அலுவலகம் குறைந்தது 95 பேர் உயிரிழந்ததாகத் தெரிவித்துள்ளது. எல்லையோர திபெத் பிராந்தியத்தின் கிராங் (Gyirong) கவுண்டியில் ஏற்பட்ட நிலச்சரிவில் குறைந்தது 3 பேர் உயிரிழந்ததாகவும், 265 பேரைக் காணவில்லை என்றும் சீனாவின் அரசுத் தொலைக்காட்சியான CCTV தெரிவித்துள்ளது. ட்ரோன் காட்சிகள் மூலம் சாலைகள் முற்றாகச் சேதமடைந்திருப்பதையும், கட்டிடங்கள் சேற்றில் புதைந்திருப்பதையும் காண முடிகிறது. அதிகளவில் உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பதாகச் சீனாவின் ‘சின்ஹுவா’ (Xinhua) அரசு செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
நேபாளத்தின் செங்குத்தான பள்ளத்தாக்குகள் அந்நாட்டின் பொருளாதாரத்திற்கும் போக்குவரத்துக்கும் முக்கிய வாழ்வாதாரமாக விளங்குகின்றன. எனினும், பேரழிவு ஏற்படும் போது அவை மிகவும் அபாயகரமானவையாக மாறுகின்றன. கடும் பாதிப்புக்குள்ளான நுவாகோட் (Nuwakot) மாவட்டத்தில், வெள்ளம் வடிந்த பின் கட்டிடங்களின் இரண்டாம் மாடிகள் வரை சேறு படிந்திருந்ததை படங்கள் காட்டுகின்றன. மரக்கிளைகள் மற்றும் மின்கம்பிகளில் இடிபாடுகள் தொங்கின; வாகனங்கள் சேற்றில் புதைந்தன; உயிர் பிழைத்த மக்கள் அதிர்ச்சியில் சேறு படிந்த உடல்களுடன் காணப்பட்டனர்.
(நேபாளத்தின் நுவாகோட் மாவட்டத்தில் உள்ள திரிசூலி ஆற்றின் கரையில் ஆகஸ்ட் 26, 2026 புதன்கிழமை ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கினால் சேதமடைந்த வீடுகளும் வாகனங்களும் – AP படம்/நிரஞ்சன் ஸ்ரேஸ்தா)
புனிதப் பயணம் மேற்கொண்ட பலரைக் காணவில்லை
நேபாள அதிகாரிகள் தெரிவிக்கையில், 341 வெளிநாட்டுப் பயணிகள் உட்பட மொத்தம் 403 பேர் காணாமல் போயுள்ளதாகப் பதிவாகியுள்ளது. திபெத்தில் உள்ள இந்துக்களின் புனிதத் தலமான கைலாச மலைக்கு யாத்திரை சென்ற 133 இந்தியர்களும் இதில் அடங்குவர் என சுற்றுலா வாரியத்தின் செய்தி தொடர்பாளர் சுனில் சர்மா தெரிவித்துள்ளார். மேலும், அமெரிக்காவைச் சேர்ந்த 47 பேர், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 34 பேர், பிரித்தானியாவைச் சேர்ந்த 33 பேர் மற்றும் கனடாவைச் சேர்ந்த 24 பேரைக் காணவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெள்ளிக்கிழமை வரவிருக்கும் உள்ளூர் பண்டிகையான ‘ஜனை பூர்ணிமா’வை முன்னிட்டு, ரசுவா (Rasuwa) மாவட்டத்தில் உள்ள கோசை்குண்டா (Gosaikunda) ஏரிப் பகுதியில் நடைபயணம் (Trekking) மேற்கொண்ட சுமார் 62 நேபாளக் குடிமக்களும் காணாமல் போயுள்ளனர். மேலும் குறைந்தது 28 காவல் அதிகாரிகள் காணாமல் போயுள்ளதாக நேபாளக் காவல் செய்தித் தொடர்பாளர் அபி நாராயண் கப்லே ‘அசோசியேட்டட் பிரஸ்’ நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
போதேகோஷி (Bhotekoshi), திரிசூலி மற்றும் நாராயணி ஆகிய ஆறுகளின் கரைகளில் வசிக்கும் பொதுமக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். புதன்கிழமை காலை 9 மணியளவில் போதேகோஷி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பல கிராமங்கள், சாலைகள் மற்றும் நீர்மின் திட்டங்கள் முற்றாக அழிந்தன.
“மீட்புப் பணிகளுக்கு உதவுமாறு இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளிடமும் நாங்கள் கோரிக்கை விடுத்துள்ளோம்,” என்று அரசாங்கச் செய்தித் தொடர்பாளர் சஸ்மித் போக்ரேல் தெரிவித்துள்ளார்.
சீனாவின் திபெத் தன்னாட்சிப் பிராந்திய எல்லையருகே, காட்மாண்டுவிற்கு வடக்கே சுமார் 100 கிலோமீட்டர் (60 மைல்) தொலைவில் புதன்கிழமை அதிகாலை 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.
தற்போதைய பருவமழைக் காலம் நேபாளத்தில் நடைபயணம் மேற்கொள்வதற்கு உகந்ததாக இல்லாவிட்டாலும், நேபாளத்தின் ரசுவா மாவட்டம் வழியாகத் திபெத்தின் கிராங் நகரை அடையும் கைலாச மலை யாத்திரைக்கு இதுவே முதன்மைப் பருவமாகும்.
காணாமல் போன குடிமக்கள் குறித்து கவலை தெரிவிக்கும் நாடுகள்
நேபாளத்தில் நீர்மின் நிலையம் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 9 தென்கொரியக் குடிமக்கள் காணாமல் போனதாகத் தென்கொரிய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேபோல, ரசுவா மாவட்டத்தில் இருந்ததாக நம்பப்படும் 11 மலேசியர்களுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதாகப் பயண முகவர்களிடமிருந்து தகவல்கள் வந்துள்ளதாக மலேசிய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்த 4 ரஷ்யக் குடிமக்களையும் காணவில்லை என நேபாளத்தில் உள்ள ரஷ்யத் தூதரகம் தெரிவித்துள்ளது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, நேபாளப் பிரதமர் பாலேந்திர ஷாவுடன் தொலைபேசியில் உரையாடித் தேவையான உதவிகளை வழங்குவதாக உறுதியளித்தார். “சாத்தியமான அனைத்து வகையான மனிதாபிமான உதவிகளையும் நேபாளத்திற்கு வழங்க இந்தியா தயாராக உள்ளது. நமது மீட்புக் குழுக்கள் ஒருங்கிணைந்து நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன,” என்று மோடி சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
ஆஸ்திரேலியா, பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியம், பின்லாந்து, பிரான்ஸ், நார்வே மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், நேபாள மக்களுக்குத் தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளன. மேலும், “நிலைமை தொடர்ந்து தீவிரமடைந்து வருவதால், பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள அனைவரும் உள்ளூர் அதிகாரிகளின் வழிகாட்டுதல்களையும் அதிகாரப்பூர்வ பாதுகாப்பு எச்சரிக்கைகளையும் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறோம்” என்றும் குறிப்பிட்டுள்ளன.
கடந்த ஆண்டும் இதே பிராந்தியத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளம்
காட்மாண்டுவை மையமாகக் கொண்டு இயங்கும் ‘ஒருங்கிணைந்த மலை மேம்பாட்டுக்கான சர்வதேச மையம்’ (ICIMOD) காலநிலை நிபுணர்கள் கூறுகையில், பனிப்பாறையிலிருந்து ஏற்பட்ட பனிச்சரிவே (Avalanche) புதன்கிழமை ஏற்பட்ட திடீர் வெள்ளத்திற்குக் காரணம் எனத் தெரிவித்துள்ளனர்.
போதேகோஷி ஆற்றின் கிளையாறான லெண்டே கோலா (Lhende Khola) ஆற்றில் புதன்கிழமை உச்சகட்ட வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
“கடந்த 14 மாதங்களில் லெண்டே கோலா ஆற்றில் இரண்டு முறை வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இம்முறை நேபாளப் பகுதியில் உள்ள பனிப்பாறையிலிருந்து பனி மற்றும் பாறைகள் சரிந்து விழுந்து ஆற்றை அடைத்ததால், கீழ்நோக்கிச் சீறிப்பாய்ந்த வெள்ளமே இதற்குக் காரணம்,” என காலநிலை ஆராய்ச்சி குழுவின் பேரிடர் ஆபத்துக் குறைப்பு நிபுணர் சாஸ்வதா சான்யால் தெரிவித்துள்ளார். “வெப்பமடைந்து வரும் இமயமலைப் பகுதியில்” முன்எச்சரிக்கை அமைப்புகளின் முக்கியத்துவத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலும் இதே பிராந்தியத்தில் இதுபோன்ற திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது அதிக வெப்பநிலை காரணமாகத் திபெத்தில் உள்ள பனிப்பாறை ஏரி உடைந்ததில் 9 பேர் உயிரிழந்தனர்; நேபாளத்தையும் சீனாவையும் இணைக்கும் பாலம் உட்படப் பல முக்கிய உள்கட்டமைப்புகள் சேதமடைந்தன.
மனித நடவடிக்கைகளால் ஏற்படும் காலநிலை மாற்றத்தால் இமயமலைப் பகுதி வெப்பமடைந்து வருகிறது. இதனால் இந்தியா உட்படப் பல நாடுகளை உள்ளடக்கிய இப்பகுதியில் கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது. தீவிர வெப்ப அலைகள், கனமழை மற்றும் பனிப்பாறைகள் உருகுதல் போன்ற தீவிர வானிலை நிகழ்வுகள் 2000-ம் ஆண்டிற்குப் பிறகு இரட்டிப்பாகியுள்ளதாகக் காட்மாண்டு ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் கண்டறிந்துள்ளனர்.