சென்னை:
பா.ம.க. எம்.எல்.ஏ.வின் கோரிக்கை
தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான 7-வது நாள் விவாதம் இன்று நடைபெற்றது. இதில் கனிம வளங்களை முறைகேடாக எடுப்பவர்களுக்கு அபராதம் விதிப்பதைத் தவிர்த்து, அவர்களுக்குக் கடுமையான தண்டனைகளை வழங்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் கணேஷ் குமார் பேசினார்.
வளங்கள் மீட்பும் ஜி-ஸ்கொயர் விவகாரமும்
இதற்குப் பதிலளித்துப் பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “தமிழ்நாட்டின் வளங்களை எவ்வாறு அரசின் கஜானாவிற்குக் கொண்டு வர வேண்டும் என்பது குறித்துப் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. அரசின் வளங்கள் அரசியல்வாதிகளின் கையில் இருந்தது. நான் எந்தக் கட்சியையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை; அது முன்னாள் அமைச்சராக இருக்கலாம் அல்லது முன்னாள் சட்டமன்ற உறுப்பினராக இருக்கலாம்.
நாங்கள் ஆட்சிக்கு வந்து மூன்று மாதங்கள்தான் ஆகிறது. எங்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும் குவாரிகளோ அல்லது மணல் வியாபாரமோ செய்யவில்லை, செய்யப் போவதுமில்லை. இதை உறுதியாகக் கூறுகிறோம். ஜி-ஸ்கொயரைப் பற்றியோ, மணல் கொள்ளையைப் பற்றியோ அல்லது மலைகளைப் பற்றியோ பேசினால் ஏன் தி.மு.க.வினர் பதற்றப்படுகிறார்கள்?
பினாமிகளின் ஆதிக்கம்
நான் பொருளாதாரக் கொள்கைகளைப் பற்றித்தான் பேசுகிறேன். தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த பின், ‘எனது பெயரில் ஒன்றும் இல்லை’ என்று பலர் கூறுவார்கள். ஆனால், அவர்கள் உறவினர்களின் பெயரில் கல்லூரிகள், மருத்துவமனைகள் இருக்கும். பெரும்பாலும், பினாமிகள் மூலமாகவே இப்படியான சொத்துக்கள் சம்பாதிக்கப்படுகிறது.
பினாமிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
பினாமிகளின் சொத்துக்களை மக்களின் சொத்துக்களாக மாற்றுவதற்கான முயற்சியை முதலமைச்சர் விஜய் எடுத்து வருகிறார். தமிழ்நாட்டில் இதற்கு முன்பு அதிகாரத்தில் இருந்தவர்களின் கட்டுப்பாட்டில்தான் ஜல்லிகள், மணல்கள், மலைகள் உள்ளன. முதலில் பினாமிகளாகச் செயல்படுபவர்களைக் கைது செய்ய வேண்டும்.
பினாமிகளை உருவாக்கி கனிம வளங்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைப்பவர்கள் எந்தத் தேர்தலிலும் ஜெயிக்க முடியாது. முன்னாள் அமைச்சர் ஒருவர் மதுரையில் உள்ள அனைத்துக் கனிம வளங்களையும் அவரது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். அதனால்தான் அவர் தற்போது தேர்தலில் வெற்றி பெற முடியாமல் தோற்றுப் போனார்.
கல்வி நிறுவனங்களும் பினாமி ஊழலும்
இன்றைய காலகட்டத்தில் யார் யாரெல்லாம் பொறியியல் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள் வைத்திருக்கிறார்களோ அங்குதான் பினாமி ஊழல் நடைபெறுகிறது. எதற்கெடுத்தாலும் ஆதாரத்தைக் கேட்கிறார்கள். இதற்கெல்லாம் ஆதாரம் தேவையில்லை; மக்களே அவர்களை அதிகாரத்திலிருந்து வெளியே அனுப்புவார்கள். அதற்குத் தற்போதைய த.வெ.க. அரசு ஆட்சிக்கு வந்ததுதான் மிகப்பெரிய ஆதாரம்” என்று அவர் தெரிவித்தார்.
#GSquare #AadavArjuna #TNAssembly #TVKGovernment #DMK #PMK #ChiefMinisterVijay #TamilNaduPolitics #SandMining #BenamiProperties #TNPolitics #ChennaiNews #TamilNews #PoliticalUpdates #TamilNaduNews #TrendingTN #LatestNewsTN #TNAssemblyDebate #CorruptionFreeTN #TNNewsUpdates