அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையிலான வர்த்தக மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ‘ஒன்டாரியோ ஏரி’யின் பெயரை மாற்றுவது குறித்து பரிசீலித்து வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
செவ்வாய்க்கிழமை காலை ‘டிரூத் சோஷியல்’ (Truth Social) தளத்தில் பதிவிட்ட டிரம்ப், “இனி ஒன்டாரியோவுடன் அதிக வணிகம் செய்யப்போவதில்லை என்பதால், ஒன்டாரியோ ஏரியின் பெயரை ‘லெக் அமெரிக்கா’ (Lake America) என மாற்றுவது குறித்து அமெரிக்கா தீவிரமாக பரிசீலித்து வருகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
டிரம்ப் நீர்நில ஒன்றின் பெயரை மாற்றுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்னரும் ‘மெக்சிகோ வளைகுடா’வின் (Gulf of Mexico) பெயரை ‘அமெரிக்கா வளைகுடா’ (Gulf of America) என அவர் மாற்றியிருந்தார். அந்த மாற்றம் தற்போது கூகுள் மேப்ஸிலும் பிரதிபலிக்கிறது.
புத்தாண்டு முதல் அனைத்து கனடிய கார்கள், டிரக்குகள், உதிரி பாகங்கள் மற்றும் எஃகு (Steel) மீது 50 சதவீத வரியை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக டிரம்ப் திங்களன்று தெரிவித்திருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஒன்டாரியோ மாகாண முதல்வர் டக் ஃபோர்ட் (Doug Ford) டிரம்பை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
டக் ஃபோர்டை தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேசிய டிரம்ப், அவரை முன்னாள் டொராண்டோ மேயரான மறைந்த ராப் ஃபோர்டுடன் ஒப்பிட்டு சிறுமைப்படுத்தியதுடன், பிரதமர் மார்க் கார்னி மற்றும் டக் ஃபோர்ட் ஆகிய இருவரையும் “விசித்திர மனிதர்கள்” (clowns) என்றும் வர்ணித்தார்.
இதற்கு பதிலளித்த டக் ஃபோர்ட், டிரம்பை ஒரு “சர்வாதிகாரி”, “ஏமாற்றுக்காரர்” மற்றும் “நஷ்டஈடுகளின் ராஜா” என்று சாடினார். “அவரை விட எனக்கு அதிக அனுபவமும் தைரியமும் உள்ளது. கனடாவின் இறையாண்மையையும் தொழிலாளர்களையும் பாதிக்கும் எந்தவொரு மோசமான ஒப்பந்தத்தையும் நாங்கள் ஏற்கமாட்டோம்” என்று உறுதியாகத் தெரிவித்தார்.
இதற்கிடையில், அமெரிக்காவின் இந்த வரி உயர்விற்கு எதிராக கனடாவும் அதே அளவிலான பதிலடி வரிகளை (dollar-for-dollar retaliatory measures) விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.