தற்போதைய அநுர அரசாங்கம் மக்கள் பிரச்சினைகளை விடுத்து, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் வழக்குகளை துரிதப்படுத்தவும், அவர்களை சிறைக்கு அனுப்புவதற்குமே விசேட கவனம் செலுத்தி வருகின்றது என்று பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
மக்களுக்கு வளமான வாழ்க்கையை வழங்குவதாக வாக்குறுதியளித்தே இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. ஜனாதிபதியினதும், 159 ஆளும் தரப்பு உறுப்பினர்களது வாழ்க்கை தான் வளமாகியுள்ளது. நாட்டு மக்களின் வாழ்க்கை ஏழ்மை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
திறைசேரி நிரம்பிவழிகின்றது என அரசாங்கம் குறிப்பிடுகின்றது. ஆனால், மக்கள் வாழ்க்கைத் தரம் வறுமையால் நிரம்பி வழிகின்றது.
மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் குறித்த அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை. எதிர்க்கட்சி உறுப்பினர்களின் வழக்குகளை விரைவுப்படுத்தவும், தண்டனைப் பெற்றுக் கொடுக்கவும் மாத்திரமே இந்த அரசாங்கம் முனைப்புடன் செயற்பட்டு வருகின்றது என குறிப்பிட்டுள்ளார்.