சென்னை
தேனி மாவட்டம் மேகமலை – வருசநாடு வனப்பகுதியில் பல தலைமுறைகளாக வசித்து வரும் மக்களை ஆக்கிரமிப்பாளர்களாகக் கருதி அப்புறப்படுத்தக் கூடாது என்றும், அவர்களுக்கு வன உரிமைச் சட்டத்தின் கீழ் உரிய சட்டப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவும் பின்னணியும்:
கடந்த 2021-ஆம் ஆண்டு ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலைப் புலிகள் காப்பகப் பகுதியாக வண்டியூர் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்கள் அறிவிக்கப்பட்டன. இங்குள்ள 5072 ஹெக்டேர் நிலப்பரப்பை 4601 பேர் ஆக்கிரமித்துள்ளதாகத் தொடரப்பட்ட பொதுநல வழக்கில், இவர்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், மத்திய அதிகாரமளிக்கப்பட்ட குழு துணை ராணுவப் படையைப் பயன்படுத்தலாம் எனவும், இதுகுறித்த அறிக்கையை ஆகஸ்ட் 28-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கவும் கெடு விதித்திருந்தது.
“வன உரிமைச் சட்டத்தின் கீழ் பட்டா வழங்குக”:
இந்த விவகாரம் குறித்துச் சட்டப்பேரவையில் விளக்கமளித்த சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார், “சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு எதிராகத் தமிழ்நாடு அரசு சார்பில் சீராய்வு மனுத் தாக்கல் செய்யப்படும்,” என்று அறிவித்திருப்பதை வரவேற்றுள்ள திருமாவளவன், மூன்று தலைமுறைகளாக அங்கு வசிக்கும் மண்ணின் மைந்தர்களை ஆக்கிரமிப்பாளர்களாகக் கருதாமல், 2006 வன உரிமைகள் சட்டத்தின் கீழ் அவர்களுக்குப் பட்டா மற்றும் வன உரிமைச் சட்டச் சான்றிதழ் வழங்கி முழுமையான பாதுகாப்பைத் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
#Thirumavalavan #VCK #MegamalaiIssue #ForestRightsAct #MegamalaiTigerReserve #TheniNews #SupremeCourtOrder #TNAssembly #TamilNaduNews #ChennaiNews #TNPolitics #ViralNewsTN #TrendingTN #LatestNewsTN #TNNewsUpdates