சென்னை
தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் 2-வது நாளான இன்று, ‘முதலமைச்சர் காலை உணவுத் திட்டத்தின்’ பெயரை மாற்றியது மற்றும் சட்டசபையின் உள்கட்டமைப்பு குறித்து திமுக எம்.எல்.ஏ எ.வ.வேலு மற்றும் ஆளுங்கட்சி அமைச்சர் ராஜ்மோகன் இடையே காரசார விவாதம் அரங்கேறியது.
“திட்டத்தின் பெயரை ஏன் மாற்றினீர்கள்?” – எ.வ.வேலு கேள்வி:
திமுக அரசின் திட்டங்களைப் பட்டியலிட்டுப் பேசிய எம்.எல்.ஏ எ.வ.வேலு, “முதலமைச்சர் காலை உணவுத் திட்டத்தை மாற்றி காமராஜர் பெயரை வைப்பதற்கான அவசியம் என்ன? புதிய திட்டத்தை உருவாக்கி அவர் பெயரை வையுங்கள், நாங்கள் வரவேற்கிறோம். ‘முதலமைச்சர்’ என்பது பொதுவான சொல் என்பதால் அந்தப் பெயரை வைத்தோம்; ‘ஸ்டாலின் காலை உணவுத் திட்டம்’ எனப் பெயர் வைத்தால் சர்ச்சை வரும் என அவரே மறுத்துவிட்டார். நாங்கள் உருவாக்கிய திட்டத்திற்கு நீங்கள் ஏன் பெயரை மாற்ற வேண்டும்?” என்று கேள்வி எழுப்பினார். மேலும், காமராஜருக்குச் சிலை, மணிமண்டபம் மற்றும் அவரது பிறந்தநாளைக் கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்துப் பெருமை சேர்த்தது கலைஞர் கருணாநிதிதான் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
“முன்பு நீங்கள் பெயர் மாற்றியதில்லையா?” – அமைச்சர் ராஜ்மோகன் பதிலடி:
இதற்குப் பதிலளித்த அமைச்சர் ராஜ்மோகன், “அரசுத் திட்டங்கள் அனைத்தும் மக்கள் வரிப்பணத்தில்தான் செயல்படுத்தப்படுகின்றன. இதற்கு முன், எத்தனை திட்டங்களுக்கு திமுக ஆட்சியில் நீங்கள் பெயர் மாற்றியிருக்கிறீர்கள்? காலை உணவுத் திட்டம் தற்போது ‘காமராஜர் காலை உணவுத் திட்டமாக’ விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. பள்ளிக் குழந்தைகளுக்கான இந்தத் திட்டத்திற்கு கல்விக்கண் திறந்த காமராஜர் பெயரை விடப் பொருத்தமான பெயர் வேறு எதுவும் இல்லை. திட்டங்களின் பெயர்களை மாற்றுவது காலம் காலமாக திமுக ஆட்சியிலும் செய்யப்பட்டதுதான்,” என்று பதிலடி கொடுத்தார்.
மேசை, மைக் விவகாரம்:
தொடர்ந்து பேசிய எ.வ.வேலு, “சட்டப்பேரவையில் தற்போது இருக்கும் கலைநயத்தோடு கூடிய மேசைகளும், மைக்குகளும் நான் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தபோது இரவு பகலாகப் பார்த்துப் பார்த்துச் செய்தது,” என்று உரிமை கோரினார். உடனே குறுக்கிட்ட அமைச்சர் ராஜ்மோகன், “அந்த டேபிளைச் செய்தது நாங்கள்தான், மைக்கைச் செய்தது நாங்கள்தான் எனச் சொல்கிறீர்கள்; ஆனால், இவை அனைத்தும் மக்களின் வரிப்பணத்தில் தமிழக அரசால் செய்யப்பட்டது என்பதை உங்களுக்குச் சுட்டிக்காட்டுகிறேன்,” என்று காட்டமாகப் பதிலளித்தார்.
#EVVelu #MinisterRajmohan #TNAssembly #DMK #TVKGovernment #BreakfastScheme #Kamarajar #ChiefMinisterVijay #JosephVijay #TNPolitics #TamilNaduNews #ChennaiNews #ViralNewsTN #TrendingTN #LatestNewsTN #TNNewsUpdates