சென்னை
சட்டப்பேரவையில் தவெக அமைச்சர் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் பெயரைக் குறிப்பிட்ட விதத்திற்குத் திமுகவினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அமைச்சர் சார்பாகப் பேரவையில் பகிரங்க மன்னிப்பு கோரினார்.
“கருணாநிதி” எனக் குறிப்பிட்ட அமைச்சர்:
4 நாட்கள் விடுமுறைக்குப் பிறகு தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று கூடிய நிலையில், மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் காரசாரமாக நடைபெற்றன. அப்போது பேசிய வனத்துறை அமைச்சர் ரஞ்சித் குமார், “நம்முடைய முன்னாள் முதல்வர் கருணாநிதி பற்றி அடுக்கு மொழியில் சொல்லிட்டே இருந்தாங்க” என்று பேசினார். ‘கலைஞர்’ என்ற அடைமொழியின்றி அவர் பெயரைக் குறிப்பிட்டதற்கு திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். மேலும், அவையில் அவரது பெயரை அவ்வாறு கூறுவது சரியல்ல என்றும், அந்த வார்த்தையை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும் திமுகவினர் வலியுறுத்தினர்.
அவை மரபை நினைவூட்டிய ஓ.பன்னீர்செல்வம்:
அப்போது அவையில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் ஓ.பன்னீர்செல்வம், “எம்.ஜி.ஆர் அவர்கள் முதல்வராக இருந்த காலத்திலேயே, கலைஞரை யாரும் வெறும் ‘கருணாநிதி’ என்று குறிப்பிடக் கூடாது என உத்தரவிட்டிருந்தார். அவ்வாறு குறிப்பிட்ட ஒரு சட்டமன்ற உறுப்பினரையும் அவர் கண்டித்துள்ளார். அந்த பழைய நிகழ்வை நினைவுகூர்ந்து, அவையில் அனைவரும் அந்த அவை மரபைத் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.
வருத்தம் தெரிவித்த முதலமைச்சர் விஜய்:
இந்த விவாதங்களைத் தொடர்ந்து, பேரவையில் விதி எண் 110-இன் கீழ் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் உரையாற்றினார். அப்போது திமுகவினரின் எதிர்ப்பு குறித்துப் பேசிய அவர், “முன்னதாக அமைச்சர் உங்கள் தலைவர் பெயரை (கருணாநிதி) அப்படிக் கூறியது தவறுதான். அதற்காக அவர் சார்பாக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” என்று பெருந்தன்மையுடன் தெரிவித்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
#ChiefMinisterVijay #JosephVijay #ThalapathyVijay #TVKGovernment #DMK #Kalaignar #Karunanidhi #TNAssembly #MinisterRanjithKumar #TNPolitics #TamilNaduNews #ChennaiNews #ViralNewsTN #TrendingTN #LatestNewsTN #TNNewsUpdates