திருச்சி
இந்திய பயண முகவர்கள் சங்கத்தின் 75-வது ஆண்டு விழாவில் பங்கேற்ற இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாகத் தமிழ்நாடு உருவெடுப்பது உறுதி எனத் தெரிவித்துள்ளார்.
“100 நாட்களில் லஞ்சம், ஊழல் பெருமளவில் குறைப்பு”:
திருச்சியில் நடைபெற்ற விழாவிற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரமேஷ், “தவெக ஆட்சியில் கடந்த 100 நாட்களில் அனைத்துத் துறைகளிலும் மிகப்பெரிய அளவில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக, அனைத்து அரசுத் துறைகளிலும் லஞ்சம் மற்றும் ஊழல் பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளது; இதுவே எங்கள் ஆட்சியின் மிகப்பெரிய சாதனையாகும். மக்கள் பயன்பெறும் பல்வேறு புதிய திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதால், அடுத்த 5 ஆண்டுகளில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக மாறும்,” என்று உறுதியளித்தார்.
சுற்றுலா மேம்பாடும் திருச்சி மலைக்கோட்டை நவீன திட்டமும்:
தொடர்ந்து பேசிய அவர், “சுற்றுலாத்துறையும் ஆன்மீகத்துறையும் பிரிக்க முடியாதவை. தமிழ்நாட்டின் பாரம்பரியம், கலாச்சாரம் மற்றும் தொன்மையான கோயில்களை உலக அளவில் கொண்டு சேர்க்கத் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. திருச்சியின் அடையாளமான மலைக்கோட்டைக்கு ரோப்கார் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறைவாக உள்ளதால், உலகத்தரம் வாய்ந்த நிறுவனங்களுடன் இணைந்து அதிநவீன தொழில்நுட்ப முறையில் மாற்றுப் பாதைகள் மற்றும் வசதிகளை ஏற்படுத்துவது குறித்த ஆய்வுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன,” என்றார்.
“ரீல்ஸ் ஆட்சி” – இபிஎஸ்-க்கு அமைச்சர் பதிலடி:
தமிழகத்தில் ரீல்ஸ் ஆட்சி நடப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறிய விமர்சனம் குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், “எதிர்க்கட்சிகளுக்கு எதை வைத்து விமர்சிப்பது என்றே தெரியவில்லை. திமுக, அதிமுக ஆட்சியில் இருந்தபோது 100 நாட்களில் தமிழ்நாட்டைத் தலைகீழாகவா மாற்றினார்கள்? முதலில் நிதிநிலையைச் சீரமைத்து, மக்களுக்குத் தேவையான திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும். அரசியலுக்காகப் பேசுபவர்கள் பேசிக்கொண்டுதான் இருப்பார்கள்; இப்படிப் பேசிப் பேசியேதான் இத்தனை காலம் ஆண்ட இரு கட்சிகளும் இன்று ஒன்றாக ஒரே பக்கத்தில் அமர்ந்துள்ளனர். நாங்கள் பேசாமல் செயலில் காட்டியதால்தான் இன்று மக்கள் எங்களை ஆட்சியில் அமர்த்தியுள்ளனர்,” என்று காட்டமாகப் பதிலடி கொடுத்தார்.
#MinisterRamesh #TVKGovernment #ChiefMinisterVijay #JosephVijay #ThalapathyVijay #TrichyNews #TamilNaduNews #TNPolitics #TrichyRockfort #TNTourism #HRCE #EdappadiPalaniswami #ViralNewsTN #TrendingTN #LatestNewsTN #TNNewsUpdates