கோவை
கோவையில் தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்களால் கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், முதலமைச்சர் விஜய்க்குச் சரமாரியான கேள்விகளை எழுப்பியுள்ளார்.
படுகொலையை மூடி மறைக்கிறதா தவெக அரசு?:
இந்தக் கொடூர சம்பவம் குறித்துச் சீமான் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், “கோவை கல்லூரி மாணவர் அமுதனின் படுகொலையை, சாதாரண குழு மோதல் எனக்கூறி மூடி மறைக்கப் பார்க்கிறதா அரசு?” என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார். கொலையின் உண்மையான காரணமான போதைப்பொருள் புழக்கம் என்பதைத் திட்டமிட்டு மறைத்து, மாணவர்களின் தகராறு என வழக்கின் கோணத்தை மாற்ற காவல்துறையினர் முயற்சிப்பதாக அவர் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார். “தவெக அரசின் இந்தப் போக்கு அநீதிக்குத் துணைபோகும் பச்சைத் துரோகம் இல்லையா?” என்றும் அவர் கொதித்தெழுந்துள்ளார்.
கல்விக்கூடங்களில் உயிர்ப்பறிக்கும் போதை:
மேலும், நற்பண்புகளையும் சிறந்த ஒழுக்கங்களையும் போதிக்க வேண்டிய புனிதமான கல்விக்கூடங்களில், தற்போது பகைமை, வெறுப்பு மற்றும் கொடிய போதைப்பழக்கம் ஆகியவை ஊடுருவி, ஈடுஇணையற்ற மாணவர்களின் உயிரைப் பறிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாகச் சீமான் பெரும் கவலை தெரிவித்துள்ளார்.
“தாய் மாமனாக விஜய் என்ன சொல்வார்?”:
இந்த விவகாரத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய்யை நேரடியாக விமர்சித்துள்ள சீமான், “துடிதுடித்து இறந்துபோன 19 வயது பிள்ளையின் பரிதாப மரணத்துக்கு, தன்னைத் ‘தாய் மாமன்’ என்று கூறிக்கொள்ளும் முதலமைச்சர் விஜய் என்ன பதில் சொல்லப் போகிறார்?” என மிகக் காட்டமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்க கோரிக்கை:
மேலும், ஈடுசெய்ய முடியாத பெருந்துயரத்தைச் சந்தித்துள்ள பாதிக்கப்பட்ட மாணவரின் குடும்பத்தினருக்குத் தமிழ்நாடு அரசு உடனடியாக ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் என்றும், மாணவர் அமுதனின் கொலைக்குக் காரணமான உண்மைக் குற்றவாளிகள் அனைவரையும் உடனடியாகக் கைது செய்து, சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சீமான் திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளார்.
#Seeman #NaamTamilarKatchi #NTK #ChiefMinisterVijay #ThalapathyVijay #TVKGovernment #Coimbatore #CoimbatoreStudentMurder #JusticeForAmudhan #TNPolitics #TamilNaduNews #ViralNewsTN #TrendingTN #LatestNewsTN #TNNewsUpdates