கனடாவில் சட்டப்பூர்வ குடியேற்ற தகுதி இல்லாதவர்கள் சமூக நல உதவிகளைப் பெற முடியாதவாறு ஒன்டாரியோ மாகாணம் புதிய விதிகளை அமல்படுத்துகிறது.
முன்னதாக, தற்காலிக பணி அனுமதிப் பத்திரத்தில் பல தசாப்தங்களுக்கு முன்பு கனடாவிற்கு வந்து, பின்னர் அதன் காலம் முடிவடைந்த ஒரு நபருக்கு ‘ஒன்டாரியோ வொர்க்ஸ்’ (Ontario Works) கொடுப்பனவுகளை வழங்க தீர்ப்பாயம் ஒன்று உத்தரவிட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இதைத் தொடர்ந்து, இம்மாற்றத்தைக் கொண்டுவரப் போவதாக ஒன்டாரியோ முதலமைச்சர் டக் ஃபோர்ட் (Doug Ford) முதன்முதலில் உறுதியளித்தார்.
கடந்த மாதம் தனது சமூக ஊடகப் பதிவொன்றில் எழுதிய ஃபோர்ட், கஷ்டப்படும் மக்களுக்குத் தனது அரசாங்கம் எப்போதும் ஆதரவளிக்கும் என்றும், ஆனால் “கனடாவில் சட்டவிரோதமாக வாழும் மக்கள் அதில் அடங்கமாட்டார்கள்” என்றும் குறிப்பிட்டிருந்தார்.
சிறுவர், சமூகம் மற்றும் சமூக சேவைகள் துறை அமைச்சர் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘ஒன்டாரியோ வொர்க்ஸ்’ மற்றும் ‘ஒன்டாரியோ மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் திட்டம்’ (Ontario Disability Support Program) ஆகியவற்றுக்கான விதிகளை மாகாண அரசு தற்போது திருத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
வரி செலுத்துவோரின் பணம், கனடாவில் சட்டப்பூர்வமாக வாழ அனுமதிக்கப்பட்ட நிதி நெருக்கடியிலுள்ள மக்களுக்குச் சென்றடைவதை இது உறுதி செய்யும் என்று அமைச்சர் மைக்கேல் பர்சா (Michael Parsa) தெரிவித்துள்ளார்.
கனடாவில் சட்டவிரோதமாக வாழ்பவர்கள் மற்றும் மாணவர் விசா (Student Visas), பணி அனுமதிப் பத்திரம் (Work Permits) போன்ற தற்காலிக அடிப்படையில் மட்டும் தங்கியிருக்க அனுமதி பெற்றவர்கள் சமூக நல உதவிகளைப் பெறத் தகுதியற்றவர்கள் என்பதை இந்தப் புதிய மாற்றங்கள் தெளிவுபடுத்துகின்றன.