சென்னை
வாணியம்பாடியில் பொதுவுடைமை வீரர் ஐயா ஜீவானந்தத்தின் மார்பளவு சிலை குப்பையில் வீசப்பட்டுள்ளதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதே இடத்தில் புதிய சிலையை உடனடியாக நிறுவ வேண்டும் எனத் தமிழ்நாடு அரசை அவர் வலியுறுத்தியுள்ளார்.
“மாபெரும் தலைவருக்கு இதுதான் மரியாதையா?”:
நாட்டு விடுதலைக்காகப் போராடிச் சிறை சென்றவரும், தமிழ்நாட்டிற்குப் பொதுவுடைமை தத்துவத்தை விதைத்தவருமான ஐயா ஜீவானந்தத்தின் சிலை குப்பையில் வீசப்பட்டுள்ளது மிகுந்த மனவேதனையை அளிக்கிறது. தமிழை ஆட்சி மொழியாக்க முதன்முதலில் குரல் கொடுத்த பெருந்தகையான அவரது சிலையை அலட்சியமாகக் குப்பையில் வீசியுள்ள செயல் வன்மையான கண்டனத்திற்குரியது. தமிழ்நாடு அரசு இதனை வேடிக்கைப் பார்ப்பது வெட்கக்கேடானது. இதுதான் நாட்டிற்கு உழைத்த மாபெரும் தலைவருக்குத் தவெக அரசு காட்டும் நன்றியா? என்று சீமான் கடுமையாகச் சாடியுள்ளார்.
அதே இடத்தில் புதிய சிலை நிறுவ கோரிக்கை:
சுடுகாட்டில் கூரையமைத்து, ஒழுகும் குடிசையில் உண்மையும் நேர்மையுமாக எளிமையாக வாழ்ந்து மறைந்த ஐயா ஜீவானந்தத்தின் 119-வது பிறந்தநாள் வரும் ஆகஸ்ட் 21-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இந்தச் சூழலில், அவருடைய சிலையைக் குப்பையில் வீசியவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன், அதே இடத்தில் மீண்டும் ஒரு புதிய சிலையை நிறுவத் தமிழ்நாடு அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பாகச் சீமான் திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளார்.
#Seeman #NaamTamilarKatchi #NTK #Jeevanandham #Vaniyambadi #TVKGovernment #TNPolitics #TamilNaduNews #Chennai #ViralNewsTN #TrendingTN #LatestNewsTN #TNNewsUpdates