சென்னை
தவெக அரசின் நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் இன்று சட்டப்பேரவையில் அனல் பறக்க நடைபெற்றது! திமுக எம்.எல்.ஏ. ரகுபதி எழுப்பிய சரமாரி கேள்விகளுக்கும் குற்றச்சாட்டுகளுக்கும், தவெக அமைச்சர்கள் சிறிதும் சளைக்காமல் கொடுத்த அதிரடிப் பதிலடிகள் பேரவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் மற்றும் பிரவீன் சக்கரவர்த்தி சர்ச்சை:
விவாதத்தைத் தொடங்கி வைத்துப் பேசிய திமுக எம்.எல்.ஏ. ரகுபதி, “நிதி அமைச்சர் ஜெபமாலையோடும், வேளாண் அமைச்சர் திருப்பதி லட்டோடும் பட்ஜெட்டைத் தாக்கல் செய்துள்ளனர். ஆனால் எதிலும் வெளிப்படைத்தன்மை எனக் கூறும் இந்த அரசு, தகவல் உரிமை ஆணையத்தின் பொறுப்புகளை ஏன் இன்னும் நிரப்பவில்லை?” எனக் கேள்வி எழுப்பினார். மேலும், காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி. பிரவீன் சக்கரவர்த்தி தமிழக அரசின் கொள்கைகளை வடிவமைப்பதாக ஆங்கில நாளிதழில் வந்த செய்தி உண்மையா எனவும் வினவினார்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர் விஸ்வநாதன், “ஊடகங்கள் ஒரு செய்தியைப் பலவிதமாக எழுதும். பிரவீன் சக்கரவர்த்தி தமிழக அரசின் எந்தவொரு குழுவிலும் அங்கத்தினராக இல்லை. அவையில் இல்லாத ஒரு நபரைப் பற்றி பத்திரிகை செய்தியை வைத்துப் பேசுவது ஏற்புடையதல்ல” எனத் திட்டவட்டமாக மறுத்தார்.
நிதிக் கசிவும்.. லஞ்சக் குற்றச்சாட்டும்.. அமைச்சரின் மாஸ் பதிலடியும்!
தொடர்ந்து பேசிய ரகுபதி, பட்ஜெட்டில் ‘நிதிக் கசிவு’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தியது குறித்துக் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த நிதியமைச்சர் மரிய வில்சன், “ஒவ்வொரு துறையிலும் எப்படி நிதிக் கசிவு நடந்தது எனத் தணிக்கை செய்து வருகிறோம். 3 துறைகளுக்கான தணிக்கை முடிந்துவிட்டது. அனைத்தையும் தணிக்கை செய்து உரிய கோப்புகளோடு அவையில் நிரூபிப்போம். கடந்த முறை ‘பார்ட்டி ஃபண்ட்’ என்றவுடன் அவையை விட்டு வெளியேறினீர்கள்; இனி அப்படி நடக்காது” என எச்சரித்தார்.
இதற்குப் பதிலடி தரும் விதமாக ரகுபதி, “இப்போது அரசு அலுவலகங்களில் பில் வாங்க, நீர்வளத்துறையில் 3 சதவீதமும், பொதுப்பணித்துறையில் 5 சதவீதமும் லஞ்சம் கேட்கிறார்கள்” எனப் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.
இதைக் கேட்டு கொதித்தெழுந்த அமைச்சர் ஆனந்த், “ஆதாரத்துடன் பேச வேண்டும்! அது பழைய காலம். இந்தக் காலத்தில் ஒத்த ரூபாய் நாங்கள் வாங்கினால், நாளைக்கே எங்களை இங்கே உட்கார வைக்க மாட்டார் எங்களுடைய முதலமைச்சர்! எதுவுமே இல்லாமல் பாட்டுக்குப் பேசினால் எப்படி?” எனச் சவால் விடுத்தார்.
விடியல் பயணமும்.. 1.28 லட்ச ரூபாய் கடனும்!
விவாதத்தின் உச்சகட்டமாக ரகுபதி பேசுகையில், “அண்ணன் சீர், தாய்மாமன் சீர் திட்டங்களை இந்த அரசால் நிறைவேற்ற முடியாது. எங்கள் தலைவர் எங்கே இருக்கிறார் எனக் கேட்பவர்களுக்குச் சொல்கிறோம், மகளிர் உரிமைத் தொகை வாங்கும் ஒவ்வொரு பெண்ணின் உள்ளத்திலும் மு.க.ஸ்டாலின் இருக்கிறார். எங்களால் தமிழ்நாட்டிற்கு மீண்டும் விடியல் கிடைக்கும்” என்றார்.
இதற்கு மிகக் கடுமையான பதிலடி கொடுத்த நிதியமைச்சர் மரிய வில்சன், “மகளிர் உரிமைத் தொகை பற்றி கேட்டால் உங்கள் தலைவர் பெயர் வரும் என்கிறீர்கள். ஆனால் ஒன்றை மறந்துவிட்டீர்கள். தமிழ்நாட்டில் ஒவ்வொருவர் தலையிலும் தலா ஒரு லட்சத்து 28 ஆயிரம் ரூபாய் கடனை விட்டுவிட்டுச் சென்றதும் நீங்கள்தான்! அந்த கடனில்தான் அவரைத் தேட வேண்டும் என நினைக்கிறேன்” எனச் சரமாரியாகத் தாக்கினார். இந்த காரசாரமான விவாதத்தால் சட்டப்பேரவை அதிர்ந்தது!
#TNAssembly #DMKvsTVK #MariyaWilson #Ragupathy #ThalapathyVijay #TVKGovernment #ChiefMinisterVijay #TNPolitics #TamilNaduNews #TamilNews #ViralNews #LatestNewsTN #TrendingTN #PoliticalUpdatesTN #AssemblyDebate #MKStalin