தெமட்டகொடை – குப்பியாவத்தை பகுதியில் நபரு ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி கொலை செய்ய முயன்ற சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் ஒருவர் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
2026 ஜூலை 23 ஆம் திகதி மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் இத்துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றிருந்தனர்.
இது குறித்து பொரளை பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், நேற்று புதன்கிழமை (05) லேக் டிரைவ் பகுதியில் விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது 10 கிராம் 900 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் 23 வயதுடைய இளைஞர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணைகளில், கைது செய்யப்பட்ட நபர் பொரளை பகுதியைச் சேர்ந்தவர் என்பதும், துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் போது மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவர் என்பதும் தெரியவந்துள்ளது.
மேலும், இச்சந்தேகநபருடன் இருந்த பொரளை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய மற்றொரு நபரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவருக்கும் இக்குற்றச்செயலில் தொடர்புள்ளதா என்பது குறித்து பொரளை பொலிஸார் தீவிர விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.