நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிப்போம் என்று கூறி ஆட்சிக்கு வந்துவிட்டு, நீதித்துறையின் சுயாதீனத்தின் மீது அழுத்தம் செலுத்த முயற்சிக்காதீர்கள் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (4) நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ் கேள்வி எழுப்பி உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,
நாட்டின் நீதித்துறை அமைப்பின் செயல்திறனை அதிகரிக்கும் நோக்கத்துடன் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிக்கும் யோசனையை அரசாங்கம் முன்வைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இந்த யோசனை தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட சட்டத்துறையைச் சேர்ந்த பல அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீட்டிப்பதானது நீதித்துறைச் செயல்திறனை மேம்படுத்தும் பரந்த வேலைத்திட்டத்தின் ஒரு பகுதி என அரசாங்கம் கூறுகிறது. அப்படியானால், அத்தகைய பரந்த வேலைத்திட்டத்தின் ஏனைய மறுசீரமைப்புகள் யாவை? அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான துல்லியமான கால அட்டவணை யாது?
அரசாங்கம் சுட்டிக்காட்டுவது போல், தேங்கிக் கிடக்கும் 1.1 மில்லியன் வழக்குகளில் எவ்வளவு தொகையானவை நீதிபதிகளின் பற்றாக்குறையினால் ஏற்பட்டுள்ளன? எவ்வளவு தொகையானவை நீதித்துறை நிர்வாகம், அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்களம், சட்டமா அதிபர் திணைக்களம் அல்லது ஏனைய நிறுவனங்களின் தாமதங்கள் காரணமாக ஏற்பட்டுள்ளன? அது தொடர்பான உத்தியோகபூர்வ தரவுகளை சபையில் சமர்ப்பிக்க முடியுமா?
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், சட்ட ஆணைக்குழு, சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் நீதிச்சேவை ஆணைக்குழு ஆகியவற்றுடன் இந்தத் திருத்தங்கள் தொடர்பாகப் போதுமான கலந்தாலோசனைகள் நடத்தப்பட்டனவா? அவ்வாறெனில், அந்தத் திகதிகள் யாவை? அது குறித்த அரசாங்கத்தின் நிலைப்பாடு யாது?
பொதுநலவாய சட்டத்தரணிகள் சங்கம் பிரான்ஸ் தேசிய சட்டத்தரணிகள் பேரவை உள்ளிட்ட சட்டத்துறையின் பல அமைப்புகள் இது தொடர்பில் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன. அந்த எதிர்ப்புகளை அரசாங்கம் கவனத்தில் கொண்டுள்ளதா ? அது பற்றிய அரசாங்கத்தின் பதில் என்ன?