நாட்டின் விவசாயிகளின் அறுவடைக்கு உடனடியாகச் சாமானிய விலையை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், நாமல் ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள விசேட அறிக்கை ஒன்றிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
“இந்த நாட்டின் விவசாய மக்கள் தங்களது பிரச்சினைகளைக் கூறும்போது, அவர்களைக் கசிப்புக்காரர்கள் என்று கூறுகிறார்கள். நெல் விலை குறித்து விவசாயிகள் பேசும்போது, ‘இல்லை நாம் வழங்க மாட்டோம்’ என்று கூறுகிறார்கள்.
உரம் உரிய நேரத்தில் விவசாயிகளுக்குக் கிடைப்பதில்லை. நெல் அறுவடை செய்யும் காலத்தைப் பார்த்து வெளிநாடுகளிலிருந்து அரிசி இறக்குமதி செய்யப்படுகிறது.
ஆனால், ‘வெளிநாடுகளிலிருந்து அரிசி இறக்குமதி செய்யப்பட மாட்டாது, இதுவே அரிசி இறக்குமதி செய்யப்படும் கடைசி ஆண்டாகும்’ என்று கூறினார்களே, அது எங்கே?” என நாமல் ராஜபக்ச அந்த அறிக்கையில் கேள்வி எழுப்பியுள்ளதுடன், அரசாங்கத்தின் விவசாயக் கொள்கைகளையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.