சென்னை:
மேகதாது அணைக்காகக் காடுகள் அழிக்கப்படுவதை ராகுல் காந்தி எதிர்ப்பாரா என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் சரமாரியாகக் கேள்வி எழுப்பியுள்ளார். டெல்லியில் நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்று விட்டுச் சென்னை திரும்பிய பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “அந்தமானில் காடுகள் அழிக்கப்பட்டால் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அதனைக் கடுமையாக எதிர்க்கிறார். அதேபோல், மேகதாது அணை கட்டுவதற்காகக் கர்நாடக அரசு காடுகளை அழிப்பதை அவர் கண்டித்து எதிர்ப்புத் தெரிவிப்பாரா?” என்று கேள்வி எழுப்பினார். மேகதாது விவகாரத்தில் மத்திய பா.ஜ.க. அரசையும் தாம் வெளிப்படையாகவே விமர்சித்து வருவதாகக் கூறினார்.
மேலும், காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. ஆகிய இரு தேசியக் கட்சிகளும் அரசியல் காரணங்களுக்காகத் தமிழ்நாட்டிற்கு எதிராகச் சூழ்ச்சி செய்வதாக அவர் குற்றம் சாட்டினார். கர்நாடகாவில் உள்ள 4 அணைகளில் 68 டி.எம்.சி. நீர் இருப்பு உள்ள நிலையில், காவிரி நடுவர் மன்றம் இரண்டு முறை உத்தரவிட்டும் கர்நாடக அரசு தண்ணீர் இல்லை என்று பொய் கூறித் தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறந்துவிட மறுக்கிறது என்று சாடினார். மத்திய அரசு, காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் என யார் கூறியதையும் மதிக்காத கர்நாடக அரசைச் சந்தித்துப் பேசுவதில் எந்தப் பிரயோஜனமும் இல்லை என்பதால், மேகதாது விவகாரம் தொடர்பாகத் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கர்நாடகாவிற்குச் செல்லக்கூடாது என்று அன்புமணி திட்டவட்டமாக வலியுறுத்தினார்.
இதற்குப் பதிலாக, தமிழ்நாட்டில் உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்துக் கொண்டு பிரதமர் மோடியை நேரில் சந்தித்து முதலமைச்சர் விஜய் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார். காவிரிப் பிரச்சினை என்பது த.வெ.க.வின் பிரச்சினை இல்லை, அது ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் பிரச்சினை. எனவே, அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டுவதில் தமிழ்நாடு அரசிற்கு என்ன தயக்கம்? என்று அவர் கேள்வி எழுப்பினார். மேட்டூர் அணை திறக்கப்படாததால் விவசாயிகளின் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், அரசியல் காரணங்களுக்காகவும் தேர்தலுக்காகவும் மேகதாதுவில் அணை கட்டுவதில் தீவிரமாக இருக்கும் கர்நாடக அரசின் சூழ்ச்சியில் முதலமைச்சர் விஜய் விழுந்துவிடக் கூடாது என்று ஆணித்தரமாக எச்சரித்துள்ளார்.
#AnbumaniRamadoss #RahulGandhi #MekedatuDam #CmVijay #PMK #BmNews #TamilNews #BreakingNewsTN #CauveryIssue #TamilNaduPolitics #KarnatakaGovt #PoliticalUpdate #TamilNewsLive