சென்னை:
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33வது பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் மூன்றாமிடத்திற்குத் தள்ளப்பட்டதற்கு ஆளும் தவெக அரசு தனது கடுமையான கண்டனத்தை மிக ஆவேசமாகப் பதிவு செய்துள்ளது. இன்று நடைபெற்ற இந்த மாபெரும் பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், பல்கலைக்கழக மாணவ – மாணவியருக்குப் பட்டங்களை வழங்கினார். அப்போது எதிர்பாராத விதமாக, வந்தே மாதரம் மற்றும் தேசிய கீதத்திற்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில்தான் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடப்பட்டது. தமிழ்நாட்டின் மாநிலப் பாடலான தமிழ்த்தாய் வாழ்த்துக்கு இழைக்கப்பட்ட இந்த அப்பட்டமான அவமானம், தமிழகம் முழுவதும் உள்ள தமிழ் உணர்வாளர்கள், மாணவர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
https://youtu.be/R717tPws7nohttps://youtu.be/R717tPws7no
இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், தாய்மொழியை 3வது இடத்திற்குத் தள்ளுவதை ஒருபோதும் சகித்துக்கொள்ள மாட்டோம் என்று தவெக அரசு பகிரங்கமாகத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தவெக வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ எக்ஸ் (ட்விட்டர்) தளப் பதிவில், \”நமது மனசாட்சி உள்ள மக்களாட்சியில் யார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே எப்போதும் முதலிடம் இருக்கும். எம் தாய்மொழியை மூன்றாம் இடத்திற்குத் தள்ளுவதை ஒருபோதும் நாங்கள் சகித்துக்கொள்ள மாட்டோம். இதற்கு முக்கியக் காரணமாக இருப்பது ஒன்றிய பா.ஜ.க. அரசாக இருந்தாலும் சரி அல்லது தமிழக ஆளுநராக இருந்தாலும் சரி, அவர்களுக்கு எங்களது மிகக் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்கிறோம்\” என்று ஆணித்தரமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்தப் பதிவில், \”எங்கள் நிலத்தில் எங்கள் மொழிக்கே எப்போதும் முன்னுரிமை வழங்கப்படும். இதை உறுதியாக நாம் நிலைநாட்டுவோம். இதற்காகச் சட்டரீதியான முன்னெடுப்புத் தேவை எனில், அதற்கும் நாங்கள் முழுமையாகத் தயாராகவே இருக்கிறோம்\” என்று தவெக அரசு ஆளுநருக்கும், மத்திய அரசுக்கும் பகிரங்கமான எச்சரிக்கையை விடுத்துள்ளது. தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் தவெக அரசை கடுமையாக விமர்சித்து வந்த நிலையில், ஆளுநருக்கு எதிராக ஆளும் தவெக தற்போது அதிரடியாக வெளியிட்டுள்ள இந்தக் கண்டன அறிக்கை அரசியல் களத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. மொழியுரிமையைப் பாதுகாப்பதில் எந்த சமரசமும் இல்லை என்ற தவெகவின் இந்த உறுதியான நிலைப்பாடு, தமிழ்நாட்டு மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில் அமைந்துள்ளதாகக் கல்வியாளர்களும், தமிழ் ஆர்வலர்களும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். ஆளுநரின் இந்த தன்னிச்சையான நடவடிக்கைக்கு எதிராகத் தமிழக அரசு அடுத்தகட்டமாக என்ன சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போகிறது என்ற மாபெரும் எதிர்பார்ப்பு தற்போது ஒட்டுமொத்த தமிழக மக்களிடையேயும் எழுந்துள்ளது.
#TVK #TamilThaiValthu #GovernorArlekar #CmVijay #TamilNaduPolitics #BmNews #MSUniversity #TamilLanguage #BreakingNewsTN #TamilNews #PoliticalUpdate #TniNews #TamilNewsLive