பொதுமக்கள் ஒருவரிடமிருந்து கிடைத்த தகவலை அடுத்து, வான்கூவர் பொலிஸ் துறையின் முன்னாள் தொண்டர் (Volunteer) ஒருவர் மேலும் ஒரு தாக்குதல் குற்றச்சாட்டிற்கு முகம் கொடுத்துள்ளார். சந்தேகநபர் குறித்த தகவல்களை வழங்குமாறு பொலிஸார் விடுத்திருந்த பகிரங்க கோரிக்கையை அடுத்தே இத்தகவல் கிடைத்துள்ளது.
சமீபத்திய இச்சம்பவம் கடந்த ஜூன் 28 அன்று ‘கொமர்ஷல் டிரைவ்’ (Commercial Drive) பகுதியில் நடந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அங்கு மர்ம நபர் ஒருவரால் தோள்பட்டையால் முட்டித் தள்ளப்பட்ட (Shoulder-checked) நபர் ஒருவர், தனது சமநிலையை இழந்துள்ளார்.
இதற்கு அடுத்த நாள் பதிவான இதேபோன்றதொரு தாக்குதல் சம்பவம் குறித்து பொலிஸார் விடுத்திருந்த பகிரங்க கோரிக்கையைப் பார்த்த பின்னரே, பாதிக்கப்பட்ட நபர் புலனாய்வாளர்களைத் தொடர்புகொண்டுள்ளார்.
இதனடிப்படையில், கடந்த 18 மாத காலப்பகுதியில் மர்ம நபர்கள் மீது நடத்தப்பட்டதாகக் கூறப்படும் ஏழு தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக தற்போது 29 வயதுடைய டிலான் பிராண்டன் கைடா (Dylan Brandon Gaita) என்பவருக்கு எதிராகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் பெண்கள் என்றும், அவர்களில் சிலர் எவ்வித எச்சரிக்கையுமின்றி தங்களது நெஞ்சுப் பகுதியில் தாக்கப்ப்பட்டதாகவோ அல்லது உடல் ரீதியாக முட்டித் தள்ளப்பட்டதாகவோ (Body-checked) தெரிவித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கைடா இதற்கு முன்னர் வான்கூவர் சமூக பொலிஸ் மையமொன்றில் தொண்டராகப் பணியாற்றியுள்ளார். எனினும், இந்தக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட சம்பவங்கள் தொடங்குவதற்கு முன்னரே, அதாவது 2023 மார்ச் மாதத்துடன் அவரது தொண்டர் சேவை முடிவுக்கு வந்துள்ளது.
கைடா தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், இந்த குற்றச்சாட்டுகள் மற்றும் புகார்கள் இன்னும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை என்பதுடன், குற்றம் நிரூபிக்கப்படும் வரை குற்றம் சாட்டப்பட்டவர் நிரபராதியாகவே கருதப்படுவார்.