2024 ஜூலை மாதத்தில் தனது காதலனைக் குத்திக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட நியூமார்க்கெட் பெண்ணின் மீதான வழக்கு விசாரணை திங்கட்கிழமை காலை தொடங்கியது.
32 வயதுடைய மெக்கென்சி கில் (McKenzie Gill), நியூமார்க்கெட் நீதிமன்றத்திற்குள் நுழைந்தபோது, கொல்லப்பட்ட பிளேக் பிபியின் (Blake Bibby) உறவினர்களும் ஆதரவாளர்களும் “பிளேக்கிற்கு நீதி வேண்டும்” (Justice for Blake) என்ற வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகளை ஏந்தியவாறு கோஷமிட்டனர்.
36 வயதுடைய பிளேக் பிபி, 2024 ஜூலை 14 அன்று இரவு 10:30 மணியளவில் மில்லார்ட் அவென்யூவிலுள்ள (Millard Ave) தனது அடுக்குமாடி குடியிருப்பில் இறந்து கிடந்தார். அவர் நெருங்கிய கூட்டாளியின் வன்முறை மற்றும் கொலைக்கு பலியாகியுள்ளார் என்று அவரது குடும்பத்தினரும் நண்பர்களும் தெரிவித்தனர்.
“துஷ்பிரயோகம் இரு தரப்பிலிருந்தும், இரு திசைகளிலும் நடக்கலாம். இதற்கு பாலின வேறுபாடு இல்லை. காவல்துறைக்கு மறுபயிற்சி அளிக்கப்பட வேண்டும், இதன்மூலம் எப்போதும் பெரிய அல்லது பலமான நபர் (பொதுவாக ஆண்) மட்டுமே குற்றவாளி அல்ல என்பதை அவர்கள் புரிந்து கொள்ள முடியும்” என்று பிளேக் பிபியின் சகோதரர் மிட்செல் பிபி கூறினார்.
நெருங்கிய கூட்டாளி வன்முறையால் பாதிக்கப்பட்ட ஆண்களுக்கான ஆதரவு அமைப்பான யார்க் பிராந்தியத்தின் ‘ஆண்களுக்கும் குடும்பங்களுக்குமான கனடிய மையம்’ (Canadian Centre for Men and Families) உள்ளிட்ட செயற்பாட்டாளர்களும் பிபியின் குடும்பத்தினருடன் இணைந்திருந்தனர்.
“கனடா புள்ளியியல் துறை தரவுகளின்படி, நெருங்கிய கூட்டாளி வன்முறையினால் பாதிக்கப்படுபவர்களில் பாதி பேர் ஆண்கள் என்பதை நாங்கள் அறிவோம், அவர்களுக்குத் தேவையான வளங்கள் வழங்கப்பட வேண்டும்” என்று அதன் நிர்வாக இயக்குநர் பிஜான் ரஃபி (Bijan Rafii) தெரிவித்தார்.
இருப்பினும், குற்றம் சாட்டப்பட்ட மெக்கென்சி கில் தான் தற்காப்புக்காகவே (self-defence) இந்தச் செயலைச் செய்ததாக வாதிட்டுள்ளார். அவர் தற்போது கணுக்காலில் பொருத்தப்படும் ஜி.பி.எஸ் (GPS ankle monitor) கண்காணிப்புக் கருவியுடன் பிணையில் வெளியில் உள்ளார். டொராண்டோவைச் சேர்ந்த பாதுகாப்புத் தரப்பு சட்டத்தரணி ஷெரிப் ஃபோடா (Sherif Foda) இவருக்காக நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.
நீதிமன்றப் பதிவுகளின்படி, இத்தம்பதியினரிடையே குடும்ப வன்முறை குற்றச்சாட்டுகள் மற்றும் இருவர் மீதும் வழக்குகள் பதிவாகி, ஒரு கொந்தளிப்பான உறவு இருந்து வந்துள்ளது. பிளேக் பிபி, மெக்கென்சி கில்லுடன் தொடர்பு கொள்ளவோ அல்லது அவரது அருகில் இருக்கவோ கூடாது என்று டொராண்டோ நீதிமன்றம் முன்னதாக உத்தரவிட்டிருந்தது.
பிபி இறப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு அவர் மீது கடைசியாக தாக்குதல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது. அதேபோல், 2023 ஆம் ஆண்டில் கில் மீதும் பிபியைத் தாக்கியதாகக் குற்றம் சுமத்தப்பட்டு, பின்னர் அந்த வழக்குகள் கைவிடப்பட்டன.
அரசுத் தரப்பின் முதல் சாட்சியாக பிளேக் பிபியின் தாயார் சாட்சியமளித்தார். முந்தைய கூட்டாளிகளுடன் வன்முறையில் ஈடுபட்டது உள்ளிட்ட அவரது மகனின் குற்றப் பின்னணி குறித்து பாதுகாப்புத் தரப்பு வழக்கறிஞர் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.
இந்த வழக்கு விசாரணை நீதியரசர் வனேசா கிறிஸ்டி (Justice Vanessa Christie) முன்னிலையில் இரண்டு வாரங்களுக்கு நடைபெற அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது.