ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் முந்தைய நிறைவேற்றுச் சபையினால் யாழ்ப்பாணத்தில் பிரமாண்டமான சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கம் ஒன்றை நிர்மாணிக்க ஆரம்பிக்கப்பட்ட திட்டம் குறைக்கப்படவுள்ளது.
இந்தத் திட்டம் தற்போதைய ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் நிதி நிலைமைக்கு அப்பாற்பட்ட ஒன்று என கருதுவதால் ஏற்கனவே முன்மொழியப்பட்ட யாழ்ப்பாணம் சர்வதேச கிரிக்கெட் விளையாட்ரங்கத் திட்டம் குறைக்கப்படவுள்ளதாக ஊடகவியலாளர்களிடம் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் நிலைமாறுதல் குழு செயலாளர் பிரகாஷ் ஷாஃப்டர் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் ஹோட்டல்கள், வீட்டு வசதித் திட்டம், விளையாட்டுத் தொகுதி என பல்வேறு வசதிகளுடன் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கையும் நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா சில மாதங்களுக்கு முன்னர் நடத்தப்பட்டது.
ஆனால், கிடைக்கக்கூடிய நிதிக்கு ஏற்ப ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் அதன் நோக்கத்தை மறுமதிப்பீடு செய்து வருவதால், இத் திட்டம் மீளாய்வில் உள்ளது என பிரகாஷ் ஷாவ்டர் கூறினார்.
‘தற்போது இந்த திட்டம் செயல்பாட்டில் உள்ளது. நாங்கள் எதிர்பார்க்கும் திட்டத்தின் இறுதி நோக்கத்தை மீளாய்வு செய்ய வேண்டும். ஏனெனில், முன்னதாக அங்கீகரிக்கப்பட்ட திட்டம் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் நோக்கத்திற்கு அப்பாற்பட்டது. அதை நிறைவு செய்வதற்குத் தேவையான நிதி பலம் தற்போது எங்களிடம் இல்லை என்பதை நாங்கள் செய்த மீளாய்வின் மூலம் அறிந்துகொண்டுள்ளோம்’ என ஷாஃப்டர் கூறினார்.
யாழ்ப்பாணத்தில் கிரிக்கெட் உட்கட்டமைப்பை மேம்படுத்துவதில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் உறுதியாக இருக்கிறது எனத் தெரிவித்த அவர், அசல் திட்டத்தின் அளவு கணிசமாகக் குறைக்கப்படும் என்றார்.
‘யாழ்ப்பாணத்தில் ஒரு கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படவேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். ஆனால் எங்களது தற்போதைய நிதித் திறன்களுக்கு ஏற்ப யாழ்ப்பாணத் திட்டத்தில் எந்த அளவிற்கு முதலீடு செய்யலாம் என்பது குறித்து மீளாய்வு செய்து வருகிறோம்’ என அவர் மேலும் தெரிவித்தார்.
‘இவ் வேளையில் யாழ்ப்பாணத்திலோ அல்லது வேறு எந்தப் பகுதியிலோ ஒரு சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் முதலீடு செய்வதற்கு எங்களிடம் போதுமான நிதி இருப்பதாக நான் நினைக்கவில்லை’ என பிரகாஷ் ஷாஃப்டர் தெரிவித்தார்.
‘அசல் திட்டமானது ஒரு சர்வதேச விளையாட்டரங்கம், ஒரு விளையாட்டுத் தொகுதி நகரம் மற்றும் ஒரு வீட்டு வசதித் திட்டம் ஆகியவற்றைக் கொண்டிருந்தது. ஆனால், தற்போதயை நிதி நிலைமை காரணமாக இத்தகைய பிரமாண்டமான திட்டத்தை எங்களால் பரிசீலிக்க முடியாது என்று நாங்கள் கருதுகிறோம்,’ என்றார் ஷாஃப்டர்.